சார ஜோதிடம்
ஜாதக பலனை நிர்ணயிப்பதில் பாரம்பரிய முறை
ஜோதிட சாஸ்திரம் இரண்டு பிரிவுகளை உள்ளடக்கியது. ஒன்று ஜாதக கணிதம். மற்றொன்று கணித்த ஜாதகத்திற்கு பலனை நிர்ணயம் செய்தல். முதல் பிரிவான ஜாதக கணிதத்தை விட, அடுத்த பிரிவான ஜாதகத்திற்கு பலனை காண்பது என்பது சற்று கடினமான செயல்.
ஒரு ஜாதகத்தை ஒரு குறிப்பிட்ட பஞ்சாங்கத்தை கொண்டு (வாக்கியம் அல்லது திருகணிதம்) ஒரு ஜோதிடர் கணிப்பதாக வைத்து கொள்வோம். அதே பஞ்சாங்கத்தை கொண்டு எத்தனை ஜோதிடர்கள் அந்த ஜாதகத்தை கணித்தாலும், ஒரே மாதிரியான கணிதமே அந்த ஜாதகத்திற்கு அமையும். இவ்வாறு கணிக்கப்பட்ட இந்த ஜாதகத்திற்கு பலனை காணும் போது பலனும் ஒரே மாதிரியாக தானே வர வேண்டும் அப்படி ஒரே பலனை அந்த ஜாதகத்திற்கு நிர்ணயிக்க முடியுமா என்பதை மிக பெரிய கேள்வி குறியாக ஜோதிட துறை தன்னுள் வைத்துள்ளது என்பதை நம்மால் மறுக்க முடியாது.
ஒரு ஜாதகத்தின் கணிதத்தை ஒரே மாதிரியாக கணித்த அத்தனை ஜோதிடர்களும், பலனை நிர்ணயிப்பதில் ஏன் முற்றிலும் முரண்பாடான கருத்துக்களை அந்த ஜாதகத்திற்கு முன்வைக்கிறார்கள் என்பதை அவசியம் வாசகர்களாகிய ஜோதிட ஆர்வலர்கள் சிந்திக்க வேண்டும்.
உதராணமாக ஜோதிட துறையில் இரண்டு முதல் நான்கு தலைமுறையாக (பாரம்பரியம் மிக்க) இருக்கும் இரண்டு ஜோதிட அறிஞர்களிடம் ஒரு ஜாதகத்தை கொடுத்து பலன் கேட்டால் இரண்டு அறிஞர்களும் அந்த ஜாதகத்திற்கு முற்றிலும் மாறுபட்ட பலனையே தரும் வண்ணம் நமது பாரம்பரிய ஜோதிட முறை உள்ளது என்பதை மிகவும் வருத்ததுடன் தெரிவித்து கொள்கிறேன்.
மேற்கண்ட இரண்டு ஜோதிட அறிஞர்களும் ஜோதிட துறையில் நன்கு தேர்ச்சி பெற்றிருந்தாலும் கூட ஒருவர் கூறும் பலனை மறுத்து மற்றவர் கூறுவார். அவ்வாறு கூறும் அவர் தன்னுடைய சொந்த கருத்தை இங்கு கூறுகிறாரா என்றால் அதுவும் இல்லை. ஜோதிட துறையில் நன்கு அங்கீகரிக்கப்பட்ட பழம்பெரும் ஜோதிட நூலையே ஆதாரம் காட்டி தன்னுடைய கருத்துக்கு வலு சேர்ப்பார்.
அதே நேரத்தில் அடுத்த ஜோதிடரும் சற்றும் சளைக்காமல் வேறு ஒரு பழம்பெரும் ஜோதிட நூலை ஆதாரம் காட்டி தன்னுடைய கருத்துக்கு வலு சேர்ப்பார். அதே ஜாதகத்தை மூன்றாவதாக ஒரு அறிஞரிடம் கொடுத்து பலனை கேட்டல் முதலில் பலனை நிர்ணயித்த இரண்டு ஜோதிட அறிஞர்களின் கருத்தை முற்றிலுமாக மறுத்து புதிய பலனை வேறு ஒரு பழம்பெரும் ஜோதிட நூலையே ஆதாரம் காட்டி பலனை நிர்ணயம் செய்வார்.
மேற்கண்ட மூன்று ஜோதிட அறிஞர்களும் ஜோதிடத்தில் நன்கு தேர்ச்சி பெற்றவர்கள் என்பதும் பாரம்பரிய வழியில் வந்ததனால் நீண்ட அனுபவம் உடையவர்கள் என்பதாலும் கூட ஏன் ஒரே மாதிரியான பலனை இவர்களால் கூட நிர்ணயம் செய்ய முடியவில்லை? மேலும் ஒரே சாதாரண வாடிக்கையாளர் தன்னுடைய ஜாதகத்தை இந்த மூன்று அறிஞர்களிடம் காட்டி பலனை காண முற்பட்டால் அந்த வாடிக்கையாளர்களின் நிலை என்னவாகும் என்பதை வாசகர்கள் சிந்திக்க வேண்டுகிறேன்.
இதில் மேலும் நாம் மிகவும் வருத்தப்பட (அல்லது வெக்கி தலைகுனிய) வும் வாய்ப்புள்ளது. அதி என்னவெனில் அந்த வாடிக்கையாளர் தன்னுடைய ஜாதகத்தை முதலில் அந்த மூன்று ஜோதிட அறிஞர்களிடம் (தனித்தனியாக) காட்டி, அந்த மூன்று அறிஞர்களும் வெவ்வேறு பலனை நிர்ணயம் செய்ததில் திருப்தியடையாமல் சில மாதங்கள் கழித்து அதே ஜாதகத்தை அதே மூன்று அறிஞர்களிடம் மீண்டும் காட்டினால் வாடிக்கையாளரின் நிலை என்னவாகும்?
முதன்முதலில் அந்த ஜாதகத்தை பார்த்து கூறிய அதே பலனை அந்த மூன்று ஜோதிடர்களும் மீண்டும் கூறுவார்களா என்பது அடிக்கடி தன்னுடைய ஜாதகத்தை நிறைய ஜோதிடர்களிடம் காட்டி இருக்கும் வாசகர்களுக்கு நன்கு தெரியும். மேற்கண்ட தகவல்கள் ஜோதிடத்தை கடுமையாக போர்குணத்துடன் எதிர்க்கும் நாத்திகர்களுக்கு போர்வாளாக அமையும் அதே நேரத்தில் அந்த போர்வாளை எதிர்கொள்ள ஒரு சரியான கேடயத்தை நம்மை போன்ற ஜோதிடர்கள் அவசியம் இனியாவது தேடி கொள்ள வேண்டும் என்பது இந்த சிறியவனின் தாழ்மையான கருத்து.
உதாரணமாக நமது உடலில் குறிப்பாக வயிற்று பகுதியில் ஒரு கோளாறு இருப்பதாக வைத்துகொள்வோம். உடலை பரிசோதித்த மருத்துவர் வயிற்று பகுதியை scan எடுக்குமாறு கூறி, நாமும் வயிற்று பகுதியை scan எடுத்து காட்டினால் மருத்துவர் வயிற்று பகுதியில் ஒரு குறிப்பிட்ட இடம் பழுதடைந்து உள்ளது என அந்த scan Report மூலம் தெரிந்து அதை நம்மிடம் தெரிவித்து அதற்கான சிகிச்சையை தொடங்குவார்.
அதே ஸ்கேன் ரிப்போர்ட் ஐ வேறு ஒரு ஊரில் அல்லது வேறு ஒரு மாநிலத்தில் வசிக்கும் ஒரு மருத்துவரிடம் கூறும் பதில், ஏற்கனவே நம் ஊர் மருத்துவர் கூறிய அதே பதிலாக தான் இருக்கும். மேலும் இந்த இரு மருத்துவர்கள் மட்டுமல்லாது எல்லா மருத்துவரும் ஒரே பதிலை தான் கூறுவார்கள். மருத்துவ துறை மட்டும் அல்ல மற்ற எல்லா அறிவியல் சார்ந்த துறைகளிலும் மேற்கண்ட கட்டமைப்பு இருப்பதை காணலாம்.
மேற்கண்ட மருத்துவ துறை போன்ற அறிவியல் சார்ந்த துறைகளுடன் ஜோதிட துறை போட்டி போட முடியாது என்பது ஒரு வகையில் உண்மையாக இருந்தாலும் கூட அதற்கான முயற்சியில் கூட இறங்காமல் இருந்தால் எந்த விதத்தில் நாம் ஜோதிடத்தை வளர்க்க முடியும்?
ஒரு ஆய்வு நோக்கிற்கு கீழ்க்கண்ட ஜாதகத்தை ஆய்வுக்கு எடுத்து கொள்வோம், அதன்படி, கீல வருடம் ஆடி மாதம் 13 ம் நாள் (28-07-1968) ஞாயிற்று கிழமை மாலை 5 மணி 15 நிமிடத்திற்கு பாளையங்கோட்டையில் பிறந்த ஆண் குழந்தையின் ஜாதகம் பின்வருமாறு::
நவாம்ச கட்டத்தை கொண்டே கிரகங்களின் சாரத்தை அறியலாம். இருப்பினும் வாசகர்களுக்காக ஒவ்வொரு கிரகத்தின் சாரத்தினை தருகிறேன்.
சூரியன் -------- பூசம் 3 இல் -------- சனி சாரம்
சந்திரன் -------- பூரம் 2இல் -------- சுக்கிரன் சாரம்
செவ்வாய் -------- புனர்பூசம் 4 இல் -------- குரு சாரம்
புதன் -------- புனர்பூசம் 4 இல் -------- குரு சாரம்
குரு -------- பூரம் 1இல் -------- சுக்கிரன் சாரம்
சுக்கிரன் -------- ஆயில்யம் 2இல் -------- புதன் சாரம்
சனி -------- அஸ்வினி 1இல் -------- கேது சாரம்
ராகு -------- ரேவதி 1இல் -------- புதன் சாரம்
கேது -------- ஹஸ்தம் 3இல் -------- சந்திரன் சாரம்
இனி இந்த ஜாதகத்திற்கு பலனை பாரம்பரிய முறைப்படி எப்படி நிர்ணயிக்கப்படும் என்பதை பார்ப்போம். அதன் படி இந்த ஜாதகத்திற்கு சுமார் ஏழு கேள்விகளை முன்வைத்து பலனை எப்படி நிர்ணயிப்பது என பார்ப்போம்.
கேள்விகள்:
1. ஜாதகரின் உடல் ஆரோக்கியம் எப்படி இருக்கும்?
2. ஜாதகரின் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்?
3. ஜாதருக்கு குழந்தை பாக்கியம் உண்டா?
4. ஜாதரின் தொழில் ஸ்தானம் எப்படி இருக்கும்?
5. ஜாதகர் மாத சம்பளம் பெறும் அமைப்பு உள்ளதா?
6. அரசாங்க உத்தியோகம் கிடைக்குமா? அல்லது அரசாங்கம் மூலம் ஏதாவது பொருளாதார முன்னேற்றம் உண்டா?
7. ஜாதகரின் தன நிலை எப்படி இருக்கும்?
இனி மேற்கண்ட கேள்விக்கான விடைகளை இந்த ஜாதகருக்கு பாரம்பரிய முறை மூலம் எப்படி எல்லாம் நிர்ணயிக்கபடுகிறது என பார்ப்போம்.
கேள்வி 1 :
ஜாதகரின் லக்னமான தனுசுவின் அதிபதி குரு ஆகும், லக்னத்தில் எந்த கிரகமும் இல்லை, மேலும் எந்த கிரகமும் லக்னத்தை பார்க்கவில்லை. லக்னாதிபதி குரு இந்த ஜாதகத்தில் பாக்கிய ஸ்தானமான ஒன்பதில் உள்ளார். மேலும் தன்னுடைய வீட்டை பார்க்கிறார். எனவே லக்னம் பலபடுகிறது. இதனால் ஜாதகரின் ஆரோக்கிய நிலை சிறப்பாக உள்ளது.
அதே நேரத்தில் லக்னாதிபதி குரு பாக்கியஸ்தானமான ஒன்பதாம் வீட்டில் இருந்தாலும் லக்னத்திற்கு எட்டாம் அதிபதியான சந்திரனுடன் சேர்ந்து இருப்பதாலும் மேற்கண்ட குரு சந்திரன் இருவரும் எட்டாம் வீட்டில் உள்ள சுக்கிரன் சாரத்தில் உள்ளதாலும் (சுக்கிரன் ஆறுக்கும் அதிபதி) ஜாதகரின் லக்னம் பலமிழக்கும். எனவே ஜாதகரின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்காது என்றும், உடல் ஆரோக்கியத்திற்கு இரண்டு விதமான பலன்களை நிர்ணயம் செய்யலாம்.
கேள்வி 2:
7-ம் வீட்டில் எந்த கிரகமும் இல்லை, 7-ம் வீட்டின் அதிபதியான புதன், லக்னதிபதியும் ஒன்பதாம் வீட்டில் உள்ள கிரகமான குருவின் சாரத்தில் உள்ளதாலும், லக்னத்திற்கு பூர்வ புண்ணிய மற்றும் பாக்கியஸ்தானம் செவ்வாய் மற்றும் சூரியனுடன் சேர்ந்திருப்பதாலும் மேலும் களத்திரகாரனான சுக்கிரனுடன் சேர்ந்திருப்பதாலும் ஜாதகரின் திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும். அதே நேரத்தில் ஏழாம் வீட்டு அதிபதியான புதன் எட்டாம் வீட்டில் இருப்பதாலும் கலத்திரகாரகனான சுக்ரனும் எட்டாம் வீட்டில் மறைந்தாலும், மேலும் சுக்ரன் எட்டாம் வீட்டில் உள்ள புதனின் சாரத்தில் உள்ளதாலும், நவாம்ச சக்ரத்தில் களத்திரகாரகன் சுக்ரன் சனியின் (நீச்சமான) வீட்டில் உள்ளதாலும் திருமண வாழ்க்கை என்பது ஜாதகருக்கு சிறப்பாக இல்லை, என்றும் இந்த ஜாதகரின் ஏழாம் வீட்டு பலன் நிர்ணயிக்கப்படும்.
மேலும் எட்டில், ஏழாம் வீட்டு அதிபதி புதன் மற்றும் களத்திரகாரகன் சுக்ரன் இவர்கள் மட்டுமில்லாமல் இவர்களுடன் சூரியனும், செவ்வாயும் இணைந்திருப்பது பலமான களத்திர தோஷத்தை தரும் என்பதை பெரும்பாலான பாரம்பரிய முறையை பின்பற்றும் ஜோதிடர்கள் கூறுவார்கள் என்பதை வாசகர்களுக்கு நினைவு படுத்த விரும்புகிறேன்.
கேள்வி 3:
இரண்டாம் வீட்டிற்குரிய (குடும்பாதிபதி) சனி, ஐந்தாம் வீட்டில் (புத்திரஸ்தானம்) நீச்சமானாலும் கூட, சனி நின்ற சார அதிபதி கேது, லக்னத்தில் பலமான கேந்திரமான பத்தாம் வீட்டில் உள்ளதாலும், லக்னாதிபதி மற்றும் புத்திரகாரகனான குரு (முழுசுபர்) புத்திர ஸ்தானத்தை தன்னுடைய ஒன்பதாம் பார்வையால் பார்பதாலும் ஜாதகருக்கு குழந்தை என்பது திருமணமான உடனே பிறக்கும். புத்திர தோஷம் என்பது எதுவும் இந்த ஜாதகத்தில் இல்லை.
அதே நேரத்தில் ஐந்தாம் வீட்டு அதிபதியான செவ்வாய் எட்டில் நீச்சமடைந்திருப்பதாலும் இரண்டாம் வீட்டு (குடும்பாதிபதி) அதிபதி சனி ஐந்தில் நீச்சமடைந்திருப்பதாலும் மேலும் சனி, செவ்வாய் இரண்டும் நவாம்ச சக்கரத்திலும் நீச்சமாக இருப்பதாலும், இது மட்டுமல்லாமல் புத்திர காரகன் குரு, லக்னத்திற்கு எட்டாம் அதிபதியான சந்திரனும் சேர்ந்து இருப்பதோடு மட்டுமல்லாமல், எட்டாம், வீட்டில் உள்ள தன்னுடைய பகை கிரகமான சுக்கிரனின் (அசுர குரு) சாரத்தில் இருப்பதால், ஜாதகருக்கு வளமான புத்திர தோஷம் ஏற்பட்டு குழந்தை பிறப்பை கூட தடுத்து நிறுத்தும், என்பதை நிச்சயமாக பெரும்பாலான பாரம்பரிய முறையை பின்பற்றும் ஜோதிட அறிஞர்கள் கூறுவார்கள் என்பதை வாசகர்கள் கவனிக்க வேண்டுகிறேன்.
கேள்வி 4:
பத்தில் (தொழில் ஸ்தானம்) ஒரு பாம்பாவது (ராகு (அ) கேது) இருக்கவேண்டும் என்பது ஜோதிட பழமொழி. அதன்படி இந்த ஜாதகத்தில் பத்தாம் வீட்டில் கேது இருப்பதும், கேது லக்னத்திற்கு பாக்கிய ஸ்தானத்தில் உள்ள சந்திரனின் சாரத்தில் உள்ளதாலும், பத்தான் அதிபதி புதன், லக்னாதிபதியும் பாக்கிய ஸ்தானத்தில் உள்ளவருமான குருவின் சாரத்தில் உள்ளதாலும் ஜாதகருக்கு தொழில் ஸ்தானம் சிறப்பாக உள்ளது.
மேலும் பத்தாம் அதிபதி புதன், நவாம்ச லக்னத்திற்கு பத்தில் இருப்பதும் ஒருவகையில் தொழிலில் சிறப்பை தரும். அதே நேரத்தில் பத்தாம் வீட்டு அதிபதி புதன், லக்னத்திற்கு எட்டில் மறைவதும், தொழிலுக்கு காரகமான சனி ராசி சக்கரத்திலும், நவாம்சசக்கரத்திலும் நீச்சமாக இருப்பதும், பத்தாம் வீட்டில் உள்ள காது, லக்னத்திற்கு எட்டாம் வீட்டு அதிபதியான சந்திரனின் சாரத்தில் இருப்பதாலும் ஜாதகருக்கு அடிக்கடி தொழிலில் பிரச்சனைகள் அதிக அளவு வரும் என்றும் ஒரு சாரார் பலனை நிர்ணயம் செய்வார்கள்.
கேள்வி 5:
அடிமை தொழிலில் அதாவது மற்றவரிடம் மாதசம்பளம் பெறுவதை குறிக்கும் கிரகம் சனி ஆகும். சனி ராசியிலும் நவாம்சதிலும் நீச்சமாக இருப்பதால் அடிமை தொழில் அதாவது உத்யோகம் என்பது ஜாதகருக்கு அமையாது. மேலும் ஆறாம் வீடு அடிமை தொழிலை குறிக்கும். ஆறாம் வீட்டு அதிபதி எட்டில் இருப்பதாலும், எட்டில் உள்ள புதனின் சாரத்தில் உள்ளதாலும் அடிமை தொழில் அதாவது உத்யோகம் என்பது ஜாதகருக்கு விதிப்படி அமையாது.
அதே நேரத்தில் அடிமை தொழிலின் காரகனான சனி நீச்சமடைந்தாலும், லக்னாதிபதியும், முழுசுபருமான குரு சனியை பார்ப்பதால், மற்றும் சனி பத்தாம் வீட்டில் உள்ள கேதுவின் சாரத்தில் உள்ளதால் ஜாதகருக்கு மாத சம்பளம் வாங்கும் உத்யோகம் விதிப்படி உண்டு. மேலும் ஆறாம் வீட்டு அதிபதி சுக்ரன் எட்டில் இருந்தாலும், பத்தாம் வீட்டு அதிபதியான புதனின் சாரத்தில் உள்ளதால் மாத சம்பளம் பெரும் அமைப்பு விதிப்படி ஜாதகருக்கு உண்டு எனவும் வேறு ஒரு சாரார் பலனை நிர்ணயம் செய்வார்கள்.
கேள்வி 6:
அரசாங்கத்திற்கு காரகனான சூரியன் எட்டில் இருந்தாலும் சூரியன் நின்ற சார அதிபதி சனி லக்னத்திற்கு பூர்வ புண்ய ஸ்தானமான ஐந்தாம் வீட்டில் இருப்பதாலும், சூரியன் லக்னத்திற்கு ஐந்து மற்றும் பத்தாம் அதிபதிகளான புதனின் சாரத்தில் உள்ளதால் மாத சம்பளம் பெரும் அமைப்பு விதிப்படி ஜாதகருக்கு உண்டு எனவும் வேறு ஒரு சாரார் பலனை நிர்ணயம் செய்வார்கள்.
அதே நேரத்தில் சூரியன் எட்டில் மறைந்ததும், சூரியன் நின்ற சார அதிபதி சனி ராசி, நவாம்சத்தில் நீச்சமானதும், பத்தாம் வீட்டு அதிபதி புதனும் எட்டில் மறைந்ததும் (உத்யோகத்திற்கே பிரச்சனை தரும் அமைப்பு) மேலும் ராஜ கிரகமான செவ்வாய் ராசியிலும் நவாம்சத்திலும் நீச்சமடைந்ததும், ஜாதகத்தில் (ராசி கட்டத்தில்) செவ்வாய் எட்டில் இருப்பதும் (மறைந்ததும்) ஜாதகருக்கு அரசாங்கம் மூலம் எவ்வித வருமானமும் கிடைக்க ஜாதகத்தில் வழி இல்லை என பெரும்பாலான பாரம்பரிய முறையை பின்பற்றும் ஜோதிட அறிஞர்கள் பலனை நிர்ணயம் செய்வார்கள் என்பதை வாசகர்களாகிய நீங்கள் நன்கு அறிந்திருப்பீர்கள்.
கேள்வி 7:
இரண்டாம் வீட்டு அதிபதி (தனாதிபதி) சனி, லக்னத்திற்கு பூர்வபுண்ணிய வீடான இன்தாம் வீட்டில் இருப்பதாலும், சனி நின்ற சாரநாதன் கேது, லக்னத்திற்கு பலமுள்ள கேந்திரமான பத்தாம் வீட்டில் இருப்பதாலும், ஜாதகர் தன்னுடைய வாழ்நாளில் எப்போதும் பொருளாதார ரீதியில் சிறந்து விளங்குவார் என்று பலனை ஒரு சாரர் நிர்ணயம் செய்வார்கள்.
மேலும் லக்னாதிபதியும் இயற்க்கை சுபருமான (தேவ) குரு, இரண்டாம் வீட்டு அதிபதியான சனியை பார்ப்பதால் தன நிலையில் சிறந்தே ஜாதகர் விளங்குவார் என தங்களுடைய கருத்தினை மேலும் வலியுறுத்தி கூறுவார்கள்.
அதே நேரத்தில் இரண்டாம் அதிபதி சனி ராசியிலும், நவாம்சதிலும் நீட்சமாக உள்ளதாலும், சனி நின்ற ராசியின் (மேலும்) அதிபதி செவ்வாயும், ராசியிலும் நாவம்சதிலும் நீட்சமாக உள்ளதாலும், மேலும் செவ்வாய் ஏட்டில் மறைந்தாலும் தன ஸ்தானம் கேட்டுவிடுகிறது. மேலும் சனி நின்ற சார நாதன் கேது கேந்திர ஸ்தானமான பத்தில் இருந்தாலும், சனி கேதுவும் 6, 8 என்ற நிலையில் இருப்பதால் தன் ஸ்தானம் பலம் குறைந்த நிலையிலேயே இருக்கும் என ஒரு சாரார் தங்களுடைய கருத்தினை வலியுறுத்தி கூறுவார்கள். மேற்கண்ட இரண்டு விதமான பலனை (நன்மை, தீமை) ஒரு ஜாதகத்திற்கு நிர்ணயம் செய்வது எப்படி? அறிவுக்கும், அறிவியலுக்கும் ஏற்புடையதாக இருக்கும்? ஒரேமாதிரியாக ஜாதகத்தை கணித்த இவர்களால் பலனை ஏன் ஒரே மாதிரியாக உருவாக்க முடியவில்லை என்பதை வாசகர்கள் சிந்திக்க வேண்டுகிறேன்
மேற்கண்ட ஜோதிடர்கள், ஜோதிடத்தை சரியாக கற்க வில்லை என்ற அவசர முடிவுக்கு நம்மால் வரமுடியாது, வரவும் கூடாது. ஏனெனில் மேற்கண்ட ஏழு கேள்விகளை ஆய்வு செய்த விதம் அனைத்தும், நம் முன்னோர்கள் எழுதிய நூல்களையே ஆதாரமாகவும், அடிப்படையாகவும் கொண்டு நிர்ணயிக்க பட்ட பலன்கள் என்றால் அது மிகையாகது.
ஆனால் இந்த பழமையான நூல்களில் ஏதேனும் கருத்தொற்றுமை உள்ளதா என பார்த்தோமானால் ஒரு புத்தகத்தில் இருப்பதை முழுமையாக மறுத்து வேறு புத்தகத்தில் இருப்பதை நிறைய இடங்களில் காணலாம். உதாரணமாக கீ.பி பத்தாம் நூற்றாண்டில் எழுதிய புத்தகத்தை, பதினோராம் நூற்றாண்டில் எழுதிய நூல்கள் மறுத்தும், வேறுபடுத்தியும் சில கருத்துகளை கூறுகின்ற வேளையில், பன்னிரெண்டாம் நூற்றாண்டில் உருவான சில நூல்கள், பத்தாம் நூற்றாண்டில் உருவான நூல்களை வரவேற்றும், பதினோராம் நூற்றாண்டில் உருவான நூல்களின் கருத்துகளை மறுத்தும் உள்ளன என்பது தான் நம் பாரம்பரிய ஜோதிட முறையின் வளர்ச்சி (?) என்பதை அறிவியல் ரீதியாக எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்.
அதாவது ஒருதுறை வளர்ச்சி அடையும் போது (அடுத்த பரிமானத்திற்கு), ஏற்கனவே மரபுவழியில் தொன்று தொட்டு வந்து, நடைமுறைக்கு ஒத்துவராத கருத்துகளை எல்லாம் களையெடுத்து, உரமாக புதிய கருத்துகளை கொண்டு அந்த துறை ஒரு அடிமேல் நோக்கி அடுத்த தளத்திற்கு செல்லும்.
அதேநேரத்தில் அடுத்த தளத்திற்கு சென்ற உடனே மீண்டும் சில பத்து வருடங்கள் களைத்து ஒரு பரிமான வளர்ச்சி ஏற்படும் போது மீண்டும் மேல்நோக்கி தான் புதிய கருத்துகளுடன் வளர்ச்சி அடையுமே தவிர, பழைய நடைமுறைக்கு ஒத்துவராத கருத்துகளை மீண்டும் ஏற்றுக்கொண்டு தன்னுடைய வளர்ச்சி பயணத்தை எந்த அறி(வு) சார்ந்த துறையும் கீழ் நோக்கி எடுத்து செல்லாது. ஆனால் ஜோதிட துறை சற்று பரிதாபத்திற்கு என்றால் அது மிகையல்ல. ஏனெனில் ஜோதிட துறை ஒவ்வொரு நூற்றாண்டிலும் சில, புதிய கருத்துகளுடன் தன்னை வளர்த்து கொள்கின்ற அதே வேளையில், ஏற்கனவே இருக்கும் களைகள் போன்ற அறிவுக்கும், அறிவியலுக்கும், நடைமுறைக்கும் ஒத்துவராத மரபு வழிகளை தைரியமாக தூக்கி எறியாமல், அந்த களைகளுடனே ஜோதிடம் என்ற பயிர் வளர்கின்றது என்பதை மிகவும் ஆழ்ந்த மன வேதனையுடன் தங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.
அந்த வகையில் நம் முன்னோர்களால், நல்ல அடிதளத்துடன் சிறப்பான முறையில் வடிவமைக்கப்பட்ட மாளிகை போன்ற ஜோதிட துறைக்கு அவ்வப்போது வந்து சேர்ந்த பல அறி(வு)வியல் சாராத குப்பைகள் அந்த அற்புதமான மாளிகையில் இருந்து கொண்டு, அதில் ஆய்வு செய்ய வருவோரை உள்ள நுழைய விடாமல் தடுத்து நிறுத்தி தாங்களே (குப்பைகளே) இன்றுவரை ஜோதிட துறையை ஆதிக்கம் செய்து வருகின்றன என்பது இந்த சிறியவனின் தாழ்மையான கருத்து.
எனவே ஜோதிட துறையை செழுமை படுத்த நினைக்கும் ஜோதிட ஆர்வலர்கள், முதலில் ஜோதிட துறையில் இன்று வரை உள்ள அறி(வு)வியல் சாராத குப்பைகளை களைய தைரியமுடன் முன் வரவேண்டும். அப்படி குப்பைகளை களைந்தால் இனி ஜோதிடத்தை அறிவும், அறிவியலும் போட்டி போட்டு அடுத்த சில வருடங்களிலேயே ஜோதிடத்தை தங்களின் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு சென்று ஜோதிட துறையை செழுமைபடுத்திவிடும் என்றால் அது மிகையல்ல. அதன்படி ஒரு ஜாதகத்தை ஆய்வு செய்து பலன்களை நிர்ணயிக்க இதுவரை நாம் கையாண்ட முறையில் அறிவியல் தன்மை உள்ளதா என சீர்தூக்கி பார்க்கவேண்டும். உதாரணமாக ஒரு ஜாதகத்தை ஆய்வு செய்வதற்கு பாரம்பரிய முறையில் கையாளும் அணுகு முறைகளை இந்த சிறியவன் பட்டியலிடுகின்றேன். இதில் ஏதேனும் அறிவியல் கூறுகள் உள்ளனவா என்பதை தீர்மானிக்கும் பொறுப்பை வாசகர்களாகிய உங்களிடமே விட்டு விடுகிறேன்.
உதாரணமாக ஒரு பாரம்பாரிய முறையில் கணிக்கப்பட்ட ஜாதகத்தில் குறிப்பிட்ட ஒரு கிரகத்திற்கு பலனை (அதாவது அதன் தசா – புத்தி காலத்தில்) நிர்ணயிக்க பிவரும் அணுகுமுறைகள் அத்தனையும் பார்க்க வேண்டும் என்று கூறுவார்கள். அதன் படி.
1. முதலில் அந்த கிரகம் இயற்கை சுபரா அல்லது பாவியா என பார்க்க வேண்டும்.
2. லக்னத்திற்கு ஆதிபத்திய ரீதியில் சுபரா அல்லது பாவியா என பார்க்க வேண்டும்.
3. மேற்கண்ட கிரகம் ராசி கட்டத்தில் லக்னத்திற்கு எங்கு உள்ளார் மற்றும் எந்த எந்த வீட்டிற்கு அதிபதியாக உள்ளார் என பார்க்க வேண்டும்.
4. மேற்கண்ட கிரகம் லக்னத்திற்கு 6, 8, 12 ஆம் வீட்டு குரியவர்களுடன் சேர்த்து உள்ளதா அல்லது 6, 8, 12 ஆம் வீட்டதிபதிகள் அந்த கிரகத்தை பார்க்கின்றதா என கவனிக்க வேண்டும்.
5. ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட கிரகத்துடன் லக்னத்திற்கு கேந்திரதிபதிகள், திரிகோனாதிபதிகள் போன்றவர்கள் சேர்ந்து உள்ளார்களா எனவும், மேற்கண்ட கேந்திர கோணதிபதிகள் அந்த கிரகத்தை பார்க்கிறதா எனவும் கவனிக்க வேண்டும்.
6. ஆய்வுக்கு எடுத்து கொண்ட கிரகம் ராசிகட்டத்தில் எந்த நிலையில் உள்ளது என்றும் அதாவது ஆட்சி, உட்சம், நீச்சம், நட்பு, பகை, சமம், மூலதிரிகோணம் போன்றவற்றினை கொண்டு அதன் பலனை அறிவதற்கு கவனிக்க வேண்டும்
7. மேற்கண்ட கிரகத்துடன் பாதகாதிபதிகளோ அல்லது மாரகாதிபதிகளோ ராசிகட்டத்தில் சேர்ந்து உள்ளார்களா அல்லது பார்கிறார்களா என்பதை கவனிக்க வேண்டும்.
8. மேற்கண்ட கிரகம் ராசிகட்டத்தில் வக்கிரமாகவோ அல்லது அஸ்தனமாகவோ உள்ளதா என்பதை கவனிக்க வேண்டும்.
9. மேற்கண்ட கிரகம் திதி சூன்ய ராசியில் உள்ளாரா என கவனிக்க வேண்டும்
10. மேற்கண்ட கிரகம் ராகு, கேது பிடியில் உள்ளதா அல்லது பாவ கிரகங்களுக்கு மத்தியில் உள்ளதா என கவனிக்க வேண்டும்.
11. மேற்கண்ட கிரகம் ராசிகட்டத்தில் பாசகர், போதகர், காரகர், வேதகர் போன்ற நிலைகளில் எந்த நிலையில் உள்ள என கவனிக்க வேண்டும்.
12. மேற்கண்ட கிரகம் ராசிகட்டத்தில் வேறு சில கிரகங்களுடன் இணைந்து உள்ளதை யோகம் என்று கூறுவார்கள். இதில் சுப யோகமும் உண்டு, அசுப யோகமும் உண்டு. ஆய்வுக்கு எடுத்து கொண்ட கிரகம் எந்த யோகத்தை தரும் என கவனிக்க வேண்டும்.
குறிப்பு:
யோகங்கள் மட்டும் சுமார் ஐநூறுக்கு மேற்பட்டு உள்ளது. இந்த ஐநூறு யோகத்தையும் ஒருவர் மனப்பாடம் செய்து ஒரு ஜாதகத்தில் உள்ள ஒரு குறிப்பிட்ட ஒரு கிரகத்திற்கு பயன்படுத்தினால் அந்த கிரகம் அசுப யோக பலனையும், சுபயோக பலனையும் சில ராஜ யோக பலனையும் தரும் வண்ணமாகவே பெரும்பாலும் அமையும். எனவே இந்த யோகங்கள் ஜோதிடத்தில் உள்ள அறி(வு)வியல் சாராத குப்பைகள் என்பது எளியவனின் தாழ்மையான கருத்து.
13. ஆய்வுக்கு எடுத்து கொண்ட கிரகத்திற்கு இயற்க்கை சுபரான குரு மற்றும் இயற்க்கை பாவிகளான சனி மற்றும் செவ்வாயின் பார்வைகள் உள்ளதா என்பதை கவனிக்க வேண்டும்
14. ஆய்வுக்கு எடுத்து கொண்ட கிரகம் ராசிகட்டத்தில் காரக பாவ நாஸ்தி என்ற தோஷத்தை பெற்றுள்ளதா என கவனிக்க வேண்டும்.
15. மேற்கண்ட கிரகத்துடன் எந்தெந்த கிரகங்கள் சேர்ந்து உள்ளதோ, அதன் கிரக காரக தன்மைகளையும், பாவ காரக தன்மைகளையும் கருத்தில் கொள்ளல் வேண்டும்.
16. மேற்கண்ட கிரகம் நவாம்ச கட்டத்தில் ஏதேனும் சில கிரகங்களுடன் பரிவர்த்தனை பெற்றுள்ளதா என கவனிக்க வேண்டும்.
17. ஆய்வுக்கு எடுத்து கொண்ட கிரகம் நின்ற வீட்டு அதிபதி ராசிகட்டத்தில் எங்கு உள்ளார், அவரின் நிலை என்ன என பார்க்க வேண்டும்.
18. மேற்கண்ட கிரகம் பின்ன அஷ்டவர்க்கத்தில் எத்தனை பரல்களை பெற்றிருக்கின்றது என கவனிக்க வேண்டும்.
குறிப்பு:
குறைந்தது ஐந்து பரல்களையாவது பெற்றிருக்க வேண்டும் என்பது ஒரு பொது விதி.
19. மேற்கண்ட கிரகம் இரு ராசி சமுதாய (சர்வ) அஷ்டவர்க்கத்தில் எத்தனை பரல்களை பெற்றிருக்கின்றது என கவனிக்க வேண்டும்.
குறிப்பு:
குறைந்தது 27 பரல்களையாவது பெற்றிருக்க வேண்டும் என்பது ஒரு பொது விதி.
20. மேற்கண்ட கிரகம் இந்து லக்னத்திற்கு எத்தனையாவது வீட்டில் உள்ள என பார்க்க வேண்டும்
குறிப்பு:
இந்து லக்னம் என்பது, ஒருவர் பிறந்த லக்னதிர்க்கும், அவரது ராசிக்கும் ஒன்பதாம் வீட்டிக்கு உரிய ஆட்சி கிரகங்களின் எண்களை கூட்டி பிறந்த ராசியில் இருந்து அத்தனை ராசிகள் எண்ணி வரும் ராசியே இந்து லக்னமாகும். கிரகங்களின் எண்கள் (கதிர்கள்) விவரம் பின்வருமாறு அமையும். சூரியன் – 30 கதிர், சந்திரன் 16 கதிர், செவ்வாய் – 6 கதிர், புதன் – 8 கதிர், குரு – 10 கதிர், சுக்கிரன் – 12 கதிர், சனி – 1 கதிர்.
21. ஆய்வுக்கு எடுத்து கொண்ட ஜாதகத்தில் உள்ள கிரகம் கேந்திரதிபதி தோஷம் பெறுகின்றதா அல்லது கேந்திரதிபதி தோஷம் பெற்ற கிரகங்களின் சாரத்தில் உள்ளதா என பார்க்க வேண்டும்.
22. ஆய்வுக்கு எடுத்து கொண்ட கிரகம் ராசிகட்டத்தில் எந்த நட்சத்திர பாதத்தில் உள்ளது என்று கவனித்து, மேற்கண்ட நட்சத்திர அதிபதி ராசிகட்டத்தில் எங்கு உள்ளார், மற்றும் எந்தெந்த வீடுகளுக்கு அதிபதியாக வருகின்றார் என பார்க்க வேண்டும்
குறிப்பு:
அதாவது ஒரு கிரகம் தன்னுடைய காலத்தில் (தசா, புத்திகளின்) தரக்கூடிய பலன்கள், அதன் பாவ ஆதிபத்தியம், கிரக சேர்க்கை, ராசியில் இருத்தல், பார்வைகள் போன்ற இவைகள் எல்லாவற்றையும் விட அந்த கிரகம் எந்த நட்சத்திரத்தில் உள்ளதோ அதன் அதிபதியை பொறுத்தே பலனை தரும், அதாவது அந்த கிரகம் நின்ற நட்சத்திர அதிபதி எந்த வீட்டில் உள்ளாரோ அந்த வீட்டின் பலனையும், எந்தெந்த வீட்டிற்கு அதிபதியாக உள்ளாரோ அந்த வீடுகளின் பலனையும் தரும். இதற்கு சார பலன் என்றும், இவ்வாறு பலனை நிர்ணயம் செய்வது “சார ஜோதிடம்” என்றும் பெயர். பலன் கூறுவதில் பாரம்பரிய ஜோதிட முறையின் அடுத்த பரிணாம வளர்ச்சி “சார ஜோதிட முறை” என்பதும் இதன் அடிப்டையில் ஆய்வு செய்து ஒருஅடி முன்னோக்கி ஜோதிடம் தன்னை செழுமைபடுத்தி கொண்டது என்பது என்னுடைய கருத்து.
23. ஆய்வுக்கு எடுத்து கொண்ட கிரகம், ஷட் பலத்தில் எவ்வளவு பலத்தை பெற்றுள்ளது என்பதை பார்க்க வேண்டும்.
குறிப்பு:
ஷட் பலம் என்பது ஆறுவகையில் ஒரு கிரகத்தின் வலிமையை ஆராய்ந்து மதிப்பிட வேண்டும். அவை முறையே
1. ஸ்தான பலம்
2. திருக் பலம்
3. நைசர்க்கிக பலம்
4. சேஷ்ட பலம்
5. திக் பலம்
6. கால பலம்
இந்த ஆரின் பலம் என்பது இருபது பங்காகும் இவை முறையே,
ஸ்தான பலம் - 5 பங்கு
திருக் பலம் - 1 பங்கு
நைசர்க்கிக பலம் - 1 பங்கு
சேஷ்ட பலம் - 5 பங்கு
திக் பலம் - 1 பங்கு
கால பலம் - 7 பங்கு ஆகா மொத்தம் 20 பங்கு வருகின்றது.
24. ஜென்ம லக்னம் கணித்து அதன்படி பலன் காணுவது போலவே, மேலும் பலனை துல்லிய படுத்த ஜென்ம லக்னதுடன், மேலும் பன்னிரண்டு வகையான லக்னங்கள் கணித்து பலன் காண்பது துவாதச லக்னம் எனப்படும்.
அதன்படி, ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட ஜாதகத்தில் உள்ள கிரகம் இந்த பன்னிரண்டு வகையான லக்னத்தில் எங்கெங்கு உள்ளது என்று ஆய்வு செய்து அதன்படி பலனை நிர்ணயிப்பது.
குறிப்பு:
துவாதச லக்னம் என்பது முறையே
1.ஜென்ம லக்னம்
2. ஓரா லக்னம்
3. கடிகா லக்னம்
4. ஆருட லக்னம்
5. நட்சத்திர லக்னம்
6. காரக லக்னம்
7. ஆதெரிச லக்னம்
8. ஆயுர் லக்னம்
9. திரேக்காண லக்னம்
10. அங்கிச லக்னம்
11. நவாங்கிச லக்னம்
12. பாவ லக்னம் போன்றவை ஆகும்.
இவற்றில் ஜென்ம லக்னத்தை தவிர மற்ற 11 லக்னமும் எவ்வித அறிவியல் தன்மையுடனும் உருவாக்கப்படவில்லை. மற்ற 11 லக்னத்தை பற்றி எவ்வித தெளிவான நூல்களும் நம் முன்னோர்களால் நமக்கு தரபடவில்லை. அதற்கு காரணம் மற்ற 11 வகையான லக்னத்தையும் ஒரு ஆய்வு நோக்குக்காக எடுத்தார்கள் ஆனால் அவற்றின் மூலம் தெளிவான பலனை நிர்ணயிக்க முடியாததால் அவற்றை பற்றி தனியாக, விரிவாக அவர்கள் நமக்கு தெரிவிக்கவில்லை என்பதே உண்மை.
25. ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட ஜாதகத்தில் உள்ள கிரகம், தசவர்க்க சகரங்களில் உள்ள நிலைகளை கவனித்து அதன் பலத்தை அறிய வேண்டும்.
குறிப்பு:
தசவர்க்கம் என்பது ராசி கட்டம் போன்று வேறு 10 வகையான கட்டங்களை (சக்கரங்களை) கொண்டது ஆகும். இந்த கட்டங்கள் அனைத்தும் ராசி கட்டத்தை பல கூறுகளாக பிரிந்து கையாண்ட விதம் ஆகும். தசவர்க்க சக்கரங்கள் முறையே
1. ராசி சக்கரம்
2. ஓரை சக்கரம் (ராசியை 2 பாகமாக பிரிப்பது)
3. திரேக்காணம் (ராசியை 3 பாகமாக பிரிப்பது)
4. நவாம்சம் (ராசியை 9 பாகமாக பிரிப்பது)
5. துவதாம்சம் (ராசியை 12 பாகமாக பிரிப்பது)
6. திரிம்சாம்சம் (ராசியை 6 பாகமாக பிரிப்பது)
7. சப்தாம்சம் (ராசியை 7 பாகமாக பிரிப்பது)
8. சதுர்தாம்சம் (ராசியை 4 பாகமாக பிரிப்பது)
9. சோடாம்சம் (ராசியை 16 பாகமாக பிரிப்பது)
10. தசாம்சம் (ராசியை 10 பாகமாக பிரிப்பது)
11. சஷ்டியாம்சம் (ராசியை 60 பாகமாக பிரிப்பது)
நம் முன்னோர்கள் குறைந்த கால இடைவெளியில் பிரப்பவர்களை வேறுபடுத்தி காட்ட, ராசி கட்டத்தோடு மட்டும் நிற்காமல் அதை பல பிரிவுகளாக பிரிந்து மேற்கண்ட தசவர்க்க சகரங்களை உருவாக்கி, குறிகிய கால இடைவெளியில் பிரப்பவர்களை (சுமார் 5 முதல் 10 நிமிட இடைவெளியில் பிறந்தவர்கள்) எப்படியாவது வேறுபடுத்தி காட்ட வேண்டும் என்ற ஆய்வு நோக்கத்தில் உருவான அவர்களின் முயற்சியே மேற்கண்ட சக்கரங்கள் என்றால் அது மிகையாகாது.
அதே நேரத்தில் மேற்கண்ட சக்கரங்கள் லக்ன பாவத்தையும், கிரகங்களையும் மட்டுமே கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டது. மற்ற 11 பாவங்களை இந்த சக்கரங்கள் கருத்தில் கொள்ள வில்லை. கிரகங்கள் மெதுவாக செல்வதால் அன்றைய நாளில் பிறந்த அனைவருக்கும் (சந்திரனை தவிர) மேற்கண்ட தசவர்கதில் உள்ள கிரக நிலைகள் கிட்டதட்ட ஒரே மாதிரியாகவே இருக்கும்.
எனவே மேற்கண்ட சக்கரங்கள் அறிவியல் பூர்வமான முறையில் அமைய வில்லை என்பது எளியவனின் தாழ்மையான கருத்து. நம் முன்னோர்களால் இந்த சக்கரங்களை கொண்டு தெளிவான ஒரு பலனை நிர்ணயிக்க முடியாததால் தான் அவர்கள் இந்த தசவர்க்க சக்கரத்திற்கு என தெளிவாக எந்த நூலையும் உருவாக்க வில்லை என்பதை வாசகர்கள் சிந்திக்க வேண்டுகிறேன்.
அதே நேரத்தில் மேற்கண்ட தசவர்க்க சக்கரத்தில் நவாம்ச சக்கரத்திற்கு மட்டும் ஓரளவிற்கு நம் முன்னோர்களால் முக்கியத்துவம் தரப்பட்டது. ராசி, நவாம்ச கட்டங்களை தவிர மற்ற கட்டங்களுக்கு எவ்வித முக்கியத்துவமும் நம் முன்னோர்களால் பிறகு வந்த காலங்களில் தரப்படவில்லை என்பது உண்மை.
நவாம்ச கட்டத்தை நம் முன்னோர்கள் வைத்து கொண்டதற்கு காரணம் லக்னம் உள்ளிட்ட கிரகங்களின் சாரத்தை எளிதாக அறிந்து கொள்வதற்குத்தான் என்பது இந்த சிறியவனின் கருத்து. ஏனெனில் லக்னம் உள்ளிட்ட கிரகங்களின் சாரம், (நட்சத்திர பலம்) பலனை அந்த ஜாதகத்திற்கு நிர்ணயம் செய்வதில் முக்கிய பங்கு வகிக்கும் என்ற கருத்தில் நம் முன்னோர்கள் உறுதியாக இருந்தனர் என்றால் அது மிகையல்ல.
ஆனால் நம்மில் சிலர் நவாம்ச கட்டத்தில் உள்ள கிரக நிலைகளை வைத்து அப்படியே ராசி கட்டத்தில் பலனை நிர்ணயிப்பது போல (நவாம்ச லக்னத்தில் இருந்து) பலனை நிர்ணயம் செய்கின்றார்கள். இந்த அணுகுமுறையில் எவ்வித அறிவியல் கூறுகளும் இல்லை என்பதை வாசகர்கள் சிந்திக்க வேண்டுகின்றேன்.
26. ஆய்வுக்கு எடுத்து கொண்ட இந்த கிரகத்தை, சந்திரன் நின்ற வீட்டை லக்னமாக கொண்டு ஆய்வு செய்ய வேண்டும். கிட்டதட்ட லக்னத்தை மையமாக வைத்து எப்படி இந்த கிரகத்தை ஆய்வு செய்தோமோ ( 1 முதல் 25 விதிகளை கொண்டு) அதே போல் சந்திரா லக்னத்தை மையமாக வைத்து ஆய்வுகள் செய்ய வேண்டும்.
27.ஒரு சில ஜோதிட அறிஞர்கள் சூரியனையும் லக்னமாக வைத்து, ஆய்வுக்கு எடுத்து கொண்ட ஜாதகத்தில் உள்ள கிரகத்தினை ஆய்வு செய்யுமாறு கூறுவார்கள்.
குறிப்பு:
இது குறிப்பிட்ட அந்த மாதத்தில் பிறந்து அனைவருக்கும்(சந்திரனை தவிர) பெரும்பாலும் ஒரே கிரக அமைப்பை காட்டும். இந்த முறையை சிந்திக்கும் எந்த ஜோதிடரும் ஏற்று கொள்ளமாட்டார் என்பதே உண்மை. மேற்கண்ட 50க்கும் மேற்பட்ட வழிகளில் (25+ சந்திர லக்னம் (25) + சூரிய லக்னம்) ஒ௦ரு குறிப்பிட்ட ஒரு கிரகத்திற்கு மட்டும் பலனை நிர்ணயிக்க எடுத்து கொள்ளும் நேரம் கிட்டத்தட்ட 3 மணி நேரமாவது ஆகும். 9 கிரகத்திற்கு 9x3=27 மணி நேரம் கிட்டதட்ட 1 நாளை ஒரு ஜாதகத்தை ஆய்வு செய்வதற்கு எடுத்து கொள்வது என்பது அறிவிற்கு ஏற்புடையதல்ல என்பது வாசகர்களாகிய நீங்கள் நன்கு அறிவீர்கள்.
அதே நேரத்தில் இவ்வளவு நேரத்தில் வழிமுறைகளை கொண்டு ஒரு ஜடகதிற்கு ஒரே மாதிரியான பலனை தரமுடியுமா என்றல் அதுவும் நிச்சயமாக முடியாது என்பதையும் இங்கு வாசகர்கள் கவனிக்க வேண்டுகிறேன்.
உதாரணமாக இந்த கட்டுரையில் ஆய்வுக்காக எடுத்துக்கொண்ட 28-07-1968 அன்று பாளையங்கோட்டையில் மாலை 5.15 மணிக்கு கணித்த ஜாதகத்தை மீண்டும் நினைவு படுத்த வேண்டுகிறேன்.
இந்த ஜாதகத்திற்கு பலனை நிர்ணயிக்க 7 முக்கிய கேள்விகளை ஒரு ஆய்வு நோக்குக்காக கேட்டு அதற்க்கு இரண்டு விதமான முற்றிலும் மாறுபட்ட பலனை தான் நிர்ணயிக்க முடிந்தது.
மேலும் இந்த ஜாதகத்தை ஆய்வு செய்த விதம் இதற்கு முன் பார்த்த 25-க்கும் மேற்பட்ட வழிமுறைகளில் ஒரு சிலவற்றை மட்டும் (அடிக்கடி பழக்கத்தில் இருக்கும்) எடுத்துக்கொண்டதற்கே இவ்வளவு முரண்பாடுகள் என்றால், அனைத்து விதிகளை எடுத்து ஆய்வு செய்தால் குழப்பங்கள் அதிகரிக்கதான் வாய்ப்பே தவிர குறைய நிச்சியமாக வாய்ப்பு இல்லை.
(குறிப்பு: இதே ஜாதகத்தை K.B. ஜோதிட முறையில் எளியவன் இந்நூலின் கடைசி கட்டுரையில் இதே கேள்விகளை கொண்டு ஆய்வு செய்து உள்ளேன் வாசகர்கள் கடைசியில் கவனிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.)
நேர்மையும், தொழில் பக்தியும் உள்ள ஒரு ஜோதிடன் நீண்ட வருடங்கள் இதே வழி முறைகளை கையாண்டாலும் குழப்பமற்ற பலனை நிர்ணயிப்பது முடியாத விஷயம் தான். எனவே ஆரம்பத்தில் உண்மையான முறையில் ஒரு ஜாதகத்தை ஆய்வு செய்த பெரும்பாலான பாரம்பரிய ஜோதிடர்கள் சலிப்புற்று, தங்களுடைய வாடிக்கையாளரின் ஜாதகத்திற்கு பலனை கோட்சார சனி மற்றும் குருவை கொண்டு மட்டும் நிர்ணயம் செய்து தங்களை கிணற்று தவளை போல் சுருக்கி கொள்கின்றார்கள் என்றால் அது மிகையல்ல.
மேலும் இன்று ஜோதிடம் சில பல்கலை கழகங்களில் பாட திட்டமாக சேர்க்கப்பட்டுள்ளதை நினைத்து மகிழ்ச்சியுறும் அதே வேளையில், அந்த பல்கலை கழக பாட திட்டங்களை உற்று நோக்கினால், நடைமுறைக்கு ஒத்துவராத மரபு வழி ஜோதிட விதிகளையும், யோகங்களையும், பழைய நூல்களில் இருந்து அப்படியே மொழி மாற்றம் மட்டுமே செய்து உள்ளனர்.
3 ஆண்டு கால ஜோதிடவியல் பட்ட படிப்பில், முதல் வருட கருத்தினை முழுமையாக மறுத்து இரண்டாம் வருட பாட திட்டமும், மூன்றாம் வருட பாட திட்டத்தில் இரண்டாம் வருட பாட திட்டத்தை எதிர்த்தும், முதல் வருடத்தில் உள்ள சில கருத்துக்களை ஏற்றுக்கொள்ளும் விதத்தில் சில கருத்துகளையும் கொண்ட ஒரு பாட திட்டத்தையே வைக்கும் அளவிற்குதான் இன்று பல்கலை கழகங்களும் உள்ளன என்பதை மன வேதனையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
எனவே மற்ற துறைகளை போல் ஜோதிடமும் கருத்தொற்றுமையுடன் இருக்க, இத்துறைக்கு இனிவரும் காலங்களில் ஆராய்ச்சி சிந்தனையுடன் கூடிய இளைஞர்கள் மற்றும், நேர்மையான முறையில் தைரியமாக சில நடைமுறைக்கு ஒத்துவராத மரபு வழி விதி முறைகளை மாற்றும் மூத்த ஜோதிட அறிஞர்களின் ஒத்துழைப்பும் வழிக்காட்டுதலும் முதல் தேவையாகின்றது.
எனவே ஜோதிடம் என்ற பெயரை செழுமையாக வளர்க்க, ஆண்ட பயிருக்கு வெளியில் இருந்து தரமான உரத்தை இடுகின்ற அதே வேளையில் அந்த பயிருக்கு உள்ளிருக்கும் கலைகளை முழுவதுமாக களைய வேண்டும். அதற்க்கு முன் ஜோதிடம் என்ற வயலில் எது பயிர் (நெல் மணி) எது களை என்பதை வேறுபடுத்தி பார்க்கும் ஜோதிட பொது அறிவை நாம் வளர்த்துக்கொண்டால் ஒழிய, ஜோதிடத்தை செழுமை படுத்த முடியாது என்பது எளியவனின் தாழ்மையான கருத்து.
அந்த வகையில் நம் முன்னோர்களின் பலதரப்பட்ட ஆய்வுகளின் முடிவில், ஒருமித்த கருத்துக்களுடன் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் (அறிவியல் கூறுகள் உள்ள) அவர்கள் நமக்கு தந்தது “சார ஜோதிட முறை” என்ற நட்சத்திர ஜோதிட முறையாகும். நீண்ட காலமாக தொடர்ச்சியாக ஆய்வு செய்ததில் அவர்களுக்கு ஒரு உண்மை தெரிந்தது. அது என்னவென்றால் ஒவ்வொரு கிரகமும், தன்னுடைய காலத்தில் (தசா, புத்திகளில்) தன்னுடைய கிரக காரகத்தை விட தான் நின்ற நட்சத்திர அதிபதியின் கிரக காரகதையே பெரும் அளவு செயல் படுத்தியதை அவர்கள் தெளிவாக அறிந்து வைத்து அதற்கே (சாரபலத்திற்கே) முக்கியத்துவம் கொடுத்து ஜோதிடத்தை மிக சரியான பாதையில் செல்ல வழி வகுத்தனர்.
இரவில் வெறும் தீப்பந்தங்களுடன் இருந்த மனித வர்க்கம், அறிவியல் அறிஞர் தாமஸ் ஆல்வா எடிசன் அவர்கள் உலகிற்கு வழங்கிய மின்சார பல்பு மூலம் இன்று அபயாகரமான தீப்பந்தங்களுக்கு விடுதலை தந்ததை போல்,”சார ஜோதிட முறை” ஜோதிட துறையில் தீப்பந்தங்களாக இருந்த பல மூட நம்பிக்கைகளுக்கு விடுதலை கொடுத்து, ஜோதிடத்திற்கு ஒழி விளக்காக அமைந்தது என்றால் அது மிகையல்ல.
அடுத்து ஜோதிடத்துரைக்கு ஒரு சவாலாக இருந்தது ஜோதிட கணிதம் ஆகும். நும் முன்னோர்கள் வாழ்ந்த காலத்தில் மக்கள் தொகை மிகவும் குறைவு அதனால் பிறப்பு விகிதமும், குறைவாகத்தான் இருந்திருக்கும். எனவே வெறும் ராசிக்கட்டத்தையும்,அதிலுள்ள கிரகங்களின் சரபலதியும் கொண்டு அவர்கள் நிர்ணயித்த பலன்கள் அப்போது நடந்திருக்கலாம். ஆனால் இன்று நிலைமை வேறு, சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த மக்கள் தொகையை விட இன்று சுமார் 10 மடங்கு அதிகம். அதனால் பிறப்பு விகிதங்களும் மிகவும் அதிகம். அதனால் சுமார் 500 வருடங்களுக்கு முன் இருந்த ஜோதிட கணக்கீடுகளை விட இன்று மிகவும் துல்லிய நுண்ணிய கணக்கீடுகள் தேவை என்பது ஜோதிட துறையின் மீது காலம் செலுத்தும் ஒரு ஆதிக்கமே என்றால் அது மிகையாகாது.
எனவே, கிரகங்களையும், பாவங்களையும் ஒரு சரியான அறிவியல் தன்மையுடன் நுட்பமாக பிரிக்க வேண்டியது இன்றைய காலத்தின் கட்டாயம் ஆகும். இதற்கு ஜோதிடத்தில் மிக நுண்ணிய, தெளிவான ஒவ்வொரு நொடிக்கும் வான சாஸ்திர ரீதியாக கணிதம் தேவை, ஏனெனில் இந்த உ;லகில் எந்த இரு மனிதர்களும் ஒரே மாதிரியான வாழ்க்கை முறையை கொண்டிருக்கவில்லை. அதாவது ஒவ்வொரு மனித வாழ்க்கையும் தனித்தன்மை வாய்ந்தது.
மேற்கண்ட கருத்துக்களின் அடிப்படையில், சென்ற நூற்றாண்டில் ஜோதிட உலகிற்கு (சார ஜோதிடம்) காலம் வழங்கிய இரு சிறந்த மேதைகள் திரு R. கோபாலகிருஷ்ணராவ் (மீனா) அவர்களும் திரு K.S.கிருஷ்ணமுர்த்தி அவர்களும் ஆவார்கள். இவர்கள், மேற்கண்ட ஆராய்ச்சியின் முடிவில் ஒரு கிரகம் தான் நின்ற நட்சத்திரம், உபனட்சத்திரம் இவைகள் மூலமாக தான் பலனை தருகின்றது என்ற கருத்தினை கண்டுபிடித்து சார ஜோதிட முறையை ஒரு அடி முன்னோக்கி நகர்த்தி அதை மேம்படுத்தினார்.
திருமீனா அவர்கள், ராசி மண்டலத்தில் உள்ள 27 நட்சத்திரங்களையும், விம்சோததரி தசா அடிப்படையில் 9 பாகமாக பிரித்து (27x9=243) 243 பிரிவுகளாக வான மண்டலத்தை பிரித்தார். இந்த உப பிரிவுகளுக்கு உபநட்சத்திரம் என்று பெயர்.
திரு.மீனா அவர்களின் அடித்தளத்தில் இருந்து ஆய்வுகளை மேற்கொண்ட திரு.K.S. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் இந்த 243 உபபிரிவுகளை மேலும் மேம்படுத்தி சூரியன், குரு நட்சத்திரங்களில் உள்ள சந்திரன், ராகு உப பிரிவுகள் இரண்டு ராசிகளில் வருவதால் 243 உப நட்சத்திரங்களுடன் மேலும் 6 உப நட்சத்திரங்களை சேர்த்து 249 உப பிரிவுகளாக ராசி மண்டலத்தை பிரித்து மேம்படுத்தினார்.
குறிப்பாக திரு.K.S.K அவர்கள் இந்த உப நட்சத்திரங்களை, பாவங்களுக்குள் புகுத்தி, ஜோதிட கணிதத்தை, கணக்கீடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் அளவிற்கு அதனை பல ஆய்வுகள் செய்து மேம்படுத்தினார். மேலும் ஜாதக பலனை நிர்ணயிப்பதில், ஜோதிட துறையை ஒரு அடி முன்நோக்கி, அதன் அடுத்த பரிணாம வளர்ச்சிக்கு முதன்முதலில் வித்திட்டார்.
ராசிமண்டலம் என்பது 360 0 (டிகிரி அல்லது பாகை) யை கொண்டது. ராசிமண்டலத்தை 12 பிரிவுகளாக பிரித்து அதன் ஒரு பிரிவுக்கு ராசி என்று பெயர். ஒரு ராசி என்பது 300 யை கொண்டது அதாவது 3600 + 12 = 300 என்று பிரிக்கபடுகின்றது. அதே போல் ராசி மண்டலத்தை 27 பிரிவுகளாக பிரித்து, அந்த பிரிவுகளுக்கு நட்சத்திரம் என்று பெயர் சூட்ட படுகின்றது. அதன் படி ஒரு நட்சத்திரம் என்பது 130.20’ யை கொண்டது. அதாவது 360 + 27 = 130 பாகையும் 200 கலையும் (மினிட்).
(குறிப்பு: பாகை என்பதை டிகிரி எனவும், கலை என்பதை மினிட் எனவும், விகலை என்பதை செகண்ட் எனவும் ஆங்கிலத்தில் கூறுவார்கள். அதே போல் 10 டிகிரி என்பது 60 மினிட்டை கொண்டது 1‘ மினிட் என்பது 60” செகண்டை கொண்டது).
ஒரு நட்சத்திரத்தை நாலு சம பாகங்களாக பிரித்து, அந்த பிரிவுகளுக்கு பாதம் என்று பெயர் சூட்டப்படுகின்றது. அதன்படி ஒரு நட்சதிரபாதம் என்பது 30.20’யை கொண்டது. அதாவது 13.20 / 4 = 30.20’. இது எப்படி வந்தது என்று குழம்பும் ஆரம்ப நிலை அன்பர்களுக்கு இதை தெளிவுபடுத்துகின்றேன். அதாவது 130.20’ யை மினிட் ஆக மாற்றினால் 13 * 60 = 780 + 20 = 800 மினிட் வரும் 800 / 4 = 200’ மினிட். இதை டிகிரி ஆகா மாற்றினால் 60 ஆல் வகுக்க வேண்டும். அதன் படி 200 / 60 = 30.20’ ஆக வரும்.
ஒரு ராசி என்பது 300 கொண்டது என ஏற்கனவே பார்த்தோம்.. அதன்படி ஒரு ராசியில் இரண்டே கால் நட்சத்திரங்கள் உள்ளன. அதாவது ஒன்பது பாதங்கள் (9x3.20=270+180’=300) மேற்கண்ட சுருக்கமாக பார்த்தால்,
ராசி மண்டலம் = 3600
1 ராசி = 300
1 நட்சத்திரம் = 130.20’
1 பாதம் = 3.20’
1 ராசி என்பது 2 முழு நட்சத்திரம் மற்றும் ஒரு நட்சத்திர பாதம். அதாவது 9 பாதம். ராசிமண்டலம் என்பது 108 பாதங்களை கொண்டது (27 * 4 = 108 பாதம்) மேற்கண்ட அனைவருக்கும் தெரியும். இருந்தாலும் ஆரம்ப நிலை நண்பர்களுக்காக இதை எழுதுயுள்ளேன்.
எல்லா கிரகமும் ஏதாவது ஒரு ராசியில் இருக்கத் தான் செய்யும். ஒரு கிரகம் ஒரு ராசியில் இருகின்றது என்று கூறுவது அந்த கிரகம் இருக்கும் இருப்பிடத்தை பொதுத்தன்மையாக கூறுவதாகும். அந்த கிரகம், அந்த ராசியில் ,உள்ள நட்சத்திரத்தில் எந்த நட்சத்திரத்தில் உள்ளது என்று கூறுவது தனித்தன்மையாக அமையும்
அதாவது ஒரு கிரகம் என்பது ஒரு மனிதராக கற்பனை செய்து கொள்ளுங்கள். ஒரு மனிதர் இந்தியாவில் வசிகின்றார் என்பது அந்த கிரகம் ஒரு ராசியில் உள்ளது என்பதற்கு ஒப்பாகும். மேலும் அந்த மனிதர் இந்தியாவில் ஒரு குறிப்பிட்ட மாநிலத்தில் வசிகின்றார் என்பது, அந்த கிரகம் அந்த ராசியில் உள்ள ஒரு நட்சத்திரத்தில் உள்ள என்பதற்கு ஒப்பாகும்.
எனவே மேலே குறிப்பிட்ட மனிதர் இந்தியாவில் வசிக்கிறார் என்பது உண்மையே, ஆனால் தன்மொழி, இனகலாச்சார பழக்கவழக்கங்களை அணைத்து இந்தியர்களை போல இவர் கொண்டிருப்பார் என உறுதியாக இங்கு நம்மால் கூற முடியுமா? இந்தியர்களுக்கென உள்ள சில பொதுவான கலாச்சார பழக்கவழக்கங்களை கொண்டிருந்தாலும் இவைகளை விட தன் மாநிலத்திற்கென உள்ள மொழி, இன, கலாச்சார பழக்கவழக்கங்களை அந்த மனிதர் கொண்டிருப்பார்.
மேற்கண்ட மாநில மக்களின் தனித்தன்மை, இந்தியர்களுக்கென உள்ள பொது தன்மையுடன் பெருமளவு ஒத்திருக்க.வேண்டும். என்ற கட்டாயம் இல்லை (இந்தியர்கள் என்ற ஒன்றை தவிர) எனவே ஒரு கிரகம் ஒரு ராசியில் இருகின்றது என்று கூறுவதை விட அந்த ராசியில் உள்ள எந்த நட்சத்திரத்தில் உள்ளது என கூறுவதே தனித்தன்மையாகும்.
அதாவது பின்வரும் படத்தை கவனிக்கவும்.
புதன் என்ற கிரகம் சிம்ம ராசியில் உள்ளது. என்பது பொதுதன்மை வாய்ந்தது. ஏனெனில் சுமார் ஒரு மாதம் வரை இது சிம்ம ராசியிலேயே இருக்கும். இதே புதன், சிம்ம ராசியில் 15.30 / உள்ளார் என்று புதன் இருக்கும் இருப்பிடத்தை துல்லியமாக கூறுவது தனித்தன்மை வாய்ந்தது.
இப்படி தனித்தன்மையுடன் கூறுவதால் என்ன பயன்?
புதன், சிம்ம ராசியில் உள்ள மகம் மற்றும் உத்திர நட்சத்திரத்தில் இல்லை என்ற பதிலும், பூரம் நட்சத்திரத்தில் உள்ளார். அதுவும் பூரம் ஒன்றாம் பாதத்தில் உள்ளார் என்ற வேறுஒரு பதிலையும் நாம் ஒருசேர பெறமுடிகின்றது. இதனால் அந்த கிரகம் சிம்ம ராசியின் அதிபதி சூரியன் காரக பலனையும் தான் (புதன்) நின்ற நட்சத்திரத்தின் அதிபதி சுக்கிரனின் காரக பலனையும் சேர்த்தே புதன் தரும் என பலனை நிர்ணயிக்கலாம்.
அதாவது ஒரு கிரகம் தனகென்று உள்ள பலனை விட தான் எந்த ராசியில் உள்ளதோ அந்த பலனையும் (ராசிஅதிபதியின் பலன்) அந்த ராசியில் எந்த நட்சத்திரத்தில் உள்ளதோ அந்த நட்சத்திரத்தின் அதிபதியின் பலனையும் தரும் என்பதே நம் முன்னோர்களின் முறைபடுதபட்ட கருத்து.
இவற்றின் ராசியதிபதியின் பலனை வலிமையாக தருமா? அல்லது நட்சத்திர அதிபதியின் பலனை வலிமையாக தருமா என்று பார்க்கும் போது ராசி என்பது பொது தன்மை கொண்டது. நட்சத்திரம் என்பது தனித்தன்மை கொண்டது. ஜோதிடத்தில் பொதுதன்மை என்பதை விட தனித்தன்மை பலம் வாய்ந்தது.
எனவே ஒரு கிரகம் தான் நின்ற நட்சத்திரத்தின் (அதிபதியின்) பலனை தான் தனித்தன்மையுடன் தரும் ஏனெனில் ராசி 0 டிகிரி முதல் 30 டிகிரி என்ற நீண்ட இடைவெளியில் (இந்தியா) கொண்டது. ஆனால் ஒரு நட்சத்திரம் என்பது 13டிகிரி 20 மினிட் என்ற காரணத்தினால் நட்சத்திரம் என்பது ராசியை விட தனித்தன்மை வாய்ந்தது.
மேற்கண்ட செய்திகளை கருத்தில் கொண்டு தான் நம் முன்னோர்கள் ஒரு பாவத்தின் (அல்லது வீட்டின்) பலனை வலிமையாக எடுத்து நடத்தும் கிரகம் பின்வரும் ஏறுவரிசை படி அமையும் என கூறினார்கள். அதன்படி,
1. ஒரு வீட்டின் ராசிஅதிபதியை விட அந்த வீட்டில் அமர்ந்திருக்கும் கிரகமே வலிமையானது. இதை தான் ஸ்தானாதிபதியை விட அவனுடைய வீட்டில் உள்ளவன் பலவன் என்று முன்னோர்கள் கூறினார்
2. அதேபோல் ஒரு வீட்டில் அமர்ந்திருக்கும் கிரகத்தை விட அதனுடைய சாரத்தில் உள்ள கிரகமே வலிமையானது. இதைநான் நம் முன்னோர்கள் ஒரு கிரகம் தான் நின்ற நட்சத்திரத்தின் பலனை தரும் என கூறினார்கள். இதேதான் பாரம்பரிய முறையில் சாரபலம் என்று கூறுகின்றார்கள். இதனை சிறிய உதாரணத்துடன் விளக்குகின்றேன்
மேற்கண்ட ராசிகட்டத்தில் சூரியன் மற்றும் புதன் என்ற இருகிரகங்களும் பூரம் நட்சத்திரத்தில் (சுக்கிர சாரம்) இருப்பதாக கொள்வோம். குரு, ரேவதி நட்சத்திரத்திலும் (புதன் சாரம்) சனி, கிருத்திகை நட்சத்திரத்திலும் (சூரிய சாரம்) இருப்பதாக கொள்வோம்.
இந்த ஜாதகத்தில் உள்ள கிரகங்களில் ஜாதகருக்கு பணத்தை தரும் கிரகம் எது என்பது கேள்வி?
பொதுவாக நாம் என்ன செய்வோம் இரண்டாம் வீட்டில் உள்ள சூரியன், செவ்வாய், புதன் என்ற மூன்று கிரகங்களும் பணத்தை தரும் என்று கூறுவோம், மேலும் சூரியன் இரண்டாம் வீட்டின் அதிபதியாகி சிம்ம லக்னத்திற்கு ஐந்திற்கும், பத்திற்கும் உடைய செவ்வாயும் இரண்டாம் வீட்டில் இருப்பதால் இவர்கள் இருவரும் ஜாதகருக்கு பணத்தை வாரி வழங்குவார்கள் என்ற பொது பலனை நிர்ணயம் செய்வோம்.
சூரியனும் புதன் செவ்வாயும் சுமார் ஒரு மாதம் ஒரு ராசியில் இருப்பதால் சிம்ம லக்னத்தில் அந்த மாதத்தில் பிறந்த அனைவருக்கும் ஒரே பலனை சூரியனும் புதன் செவ்வாயும் தஹ்ருவார்கள் என்பது பெரும்பாலும் தவறாகவே அமைகின்றது. இதை மேம்படுத்த நம் முன்னோர்கள் சூரியனும் செவ்வாயும், சிம்ம ராசியில் இருந்தாலும் அவர்கள் வெவ்வேறு நட்சத்திரங்களில் இருக்க பெரும்பாலும் வாய்ப்புண்டு
ஒருவேளை மூன்று கிரகமும் ஒரே நட்சத்திரத்தில் இருந்தாலும் ஒரு மாதத்தில் மூன்று முறை தங்களின் நட்சத்திரத்தினை இம்மூன்று கிரகங்களும் மாற்றி கொள்வதால் அந்த ஒரு மாதத்தில் சிம்ம லக்னத்தில் பிறந்தவர்களை ஓரளவு வேறுபடுத்தி காட்ட முடியும். எனவே ஒரு கிரகம் இருக்கும் இடத்தை விட தான் எந்த நட்சத்திரத்தில் உள்ளதோ அதன்படி தன்னை மாற்றி கொண்டு பலனை தரும். இது அந்த கிரகத்தின் சார பலம் என்றும் இவ்வாறு ஒரு கிரகத்தின் சரத்தை மட்டும் அடிப்படையாக கொண்டு பலனை நிர்ணயிக்கும் முறைக்கு சார ஜோதிட முறை என்று பெயர்.
அதாவது ஒரு கிரகம் தன்னுடைய காலத்தில் (தசா புத்திகளில்) தரக்கூடிய பழங்கள் அதன் பாவ ஆதிபத்தியம், கிரக சேர்க்கை, ராசியில் இருத்தல், பார்வைகள் போன்ற இவைகள் எல்லாவற்றையும் விட அந்த கிரகம் எந்த நட்சத்திரத்தில் உள்ளதோ அதன் அதிபதியை பொறுத்தே பலனை தரும் என்பது சார ஜோதிடமாகும்.
கிரகங்களின் சார பலத்தை அறிந்து கொள்வதர்ககாகவே நவாம்ச சக்கரத்திற்கு நம் முன்னோர்களால் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. நவாம்ச லக்னத்தை கொண்டு ஜாதகர் பிறந்த லக்னம் எந்த நட்சத்திரத்தில் விழுகின்றது என்பதை அறிந்து கொள்ளமுடியும். இதன் மூலம் அன்று அந்த லக்னத்தில் பிறந்தவர்களை வேறுபடுத்தலாம்.
ஆனால் மேற்கண்ட செய்திகளை கருத்தில் கொள்ளாமல் சக்கரத்தில் உள்ள கிரக நிலைகளிலும் ஆட்சி, உச்சம், நீச்சம், பகை, நட்பு, பார்வை கிரக சேர்க்கை என சில ஜோதிடர்கள் பயன்படுத்தி பலன் கூறுகிறார்கள். இது முற்றிலும் தவறான அணுகுமுறை என்பதே எளியவனின் தாழ்மையான கருத்து.
நம் முன்னோர்கள் குறுகிய கால இடைவெளியில் பிறப்பவர்கள் வேறுபடுத்தி காட்ட வேண்டும் என்ற நோக்கில் ராசிக்கட்டதில் வெவ்வேறு அளவுகளில் உட்பிரிவுகளாக பிரித்தனர். அதை வைத்து ஆய்வுகள் செய்ததில் அவர்கள் நவாம்ச கட்டத்தை மட்டும் எடுத்து கொண்டு மற்றவைகளுக்கு முக்கியத்துவம் தரமால் விட்டுவிட்டனர்.
இதற்கு காரணம் கிரகங்களின் சார பலம் என்ற ஒன்றிற்கு அவர்கள் தந்த முக்கியத்துவம் தான் என்று நான் கருதுகின்றேன்.எனவே ஜோதிடத்தை மேம்படுத்த நினைக்கும் ஒரு ஆராய்ச்சியாளர் நட்சத்திரத்தை பிரிக்கும் பணியிலிருந்து தனது ஆராய்ச்சியினை தொடங்க வேண்டும்.
ஏற்கனவே ராசியில் இருக்கும் நட்சத்திரத்தை பிரித்து விட்ட பிறகு ஏன், நட்சத்திரத்தையும் பிரிக்க வேண்டுமென்று ஒரு சில வாசகர்கள் நினைக்க கூடும். இந்த உலகத்தில் எந்த துறையும் இனிமேல் தன்னை வளர்த்து கொள்ள முடியாத அளவிற்கு வளர்ந்து விட வில்லை. ஒரு துறையின் வளர்ச்சி என்பது ஒவ்வொரு காலகட்டத்திலும் அந்த துறைக்கு கிடைக்கும் தகவல்களை கருத்தில் கொண்டே அமைகிறது.
உதாரணமாக வாசகர்களுக்கு ஒன்றை கூறுகின்றேன். இன்று அனைவர் கையிலிருக்கும் செல்போனை பதினைந்து வருடங்களுக்கு முன் பார்த்திருப்போமா? சாதாரண தொலைபேசியே (Land line) அன்றைய காலகட்டத்தில் அரிதான விஷயம். சாதாரண தொலைபேசியை ஓரிடத்தில் இருந்து அடுத்த இடத்திற்கு எடுத்து செல்ல முடியாது. இதற்க்கு என்ன தீர்வு என்று தகவல் தொடர்பு முறை சிந்தித்ததின் விளைவு, நம் கையில் செல்போன் என்பது சாதரணமாக ஆகிவிட்டது.
அதாவது எல்லா துறையிலும், எந்த காலகட்டத்தில் அத்துறையில் உள்ள கடினங்கள் உணரபடுகின்றதோ அந்த காலத்திலிருந்து, அந்த துறை தன்னை வளர்த்து கொள்ள ஆரம்பித்து கொள்கிறது. இதற்கு ஜோதிடத்துறை மட்டும் விதிவிலக்கல்ல என்பதை வாசகர்களுக்கு தெரிவித்து கொள்கிறேன்.
மேற்கண்ட கருத்தினை அடிப்படையாக கொண்டு சார ஜோதிட முறை தன்னை வளர்த்து கொண்டது. அதாவது ஒரே நட்சத்திரத்தில் பிறந்த மூன்று கிரகங்களின் தசா, புத்திகளில் முற்றிலும் மாறுப்பட்ட வெவ்வேறு பலனை தந்ததின் காரணமாகவே சார ஜோதிடத்தை மேம்படுத்தும் எண்ணம் ஏற்பட்டது.
நடைமுறையில் தசா, புத்திகள் மாறும் போது ஜாதகரின் வாழ்க்கையில் மாற்றங்கள் நிகழ்வதை கண்கூடாக பார்கின்றோம். எனவே தசா, புத்திகள் என்பது ஜோதிடத்தை தாங்கி பிடிக்கும் தூண்கள் என்பதில் எவ்வித கருத்து வேறுபாடும் இருக்க முடியாது.
ஜாதக பலனை நிர்ணயிப்பதில் K.P. முறை
ஜோதிட சாஸ்திரத்தின் இருபிரிவுகளாக ஜாதக கணிதமும், கணித்த ஜாதகத்திற்கு பலனை நிர்ணயம் செய்வதும், விஞ்ஞான பூர்வமான முறையில் பாரம்பரிய ஜோதிட முறையில் இல்லை என்பதை ஏற்கனவே கூறிவுள்ளேன்.
எனவே ஜோதிடத்தின் பரிணாம வளர்ச்சி, ஜாதக கணிதத்தில் இருந்து தான் ஆரம்பிக்க வேண்டும். சுவர் இருந்தால் தானே சித்திரம் வரைய முடியும். அறிவியல் முறையில் கணிதம் அமையாத ஜாதகத்தை வைத்து பலனை நிர்ணயம் செய்வது என்பது தண்ணீரில் கோலம் போடுவதற்கு ஒப்பாகும்.
பாரம்பரிய முறையில் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு கணித்த ராசிகட்டம், அந்த நேரத்திற்கு மட்டும் உரியதான ராசிகட்டம் என்று நம்மால் கூற முடியுமா? சுமார் இரண்டு மணிநேரம் வரை உள்ள காலகட்டத்திற்கு அதே ராசி கட்டம் (ஒரே லக்னத்தில்) அமையும் என்பதை வாசகர்களுக்கு நினைவு படுத்துகின்றேன்.
அதேநேரத்தில் கிட்டத்தட்ட அந்த மாதத்தில் பிறந்த அனைவருக்கும் (அதே நேரத்தில்) ஒருசில கிரகங்களை தவிர பெரும்பாலான கிரகங்களும் லகனமும் எவ்வித மாறுதலும் இல்லாமல் ஒரே மாதிரியான நிலைகளை ராசிகட்டத்தில் காட்டும். இந்த பொதுதன்மையான ராசிகட்டத்தை வைத்து ஒரு ஜோதிடர் துல்லியமான பலனை அந்த ஜாதகத்திற்கு எப்படி நிர்ணயிக்க முடியும் என்பதே வாசகர்கள் சிந்திக்க வேண்டுகிறேன்.
மேற்கண்ட கருத்துக்கள் ஜோதிட துறைக்கு ஒரு சர்ச்சையாகவே நீண்ட காலமாக இருந்துவந்த நிலையில் K.P. சோதிடமுறை அதற்கு ஒரு முற்றுபுள்ளி வைக்குமளவுக்கு ஜாதக கணிதத்தை, அறிவியல கட்டங்களுடன் அமைந்துள்ளது.
மேலும் திரு K.S.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் உருவாக்கிய K.P. முறை, கிரகங்களையும், பாவங்களையும் பற்றி தெளிவான விளக்கங்களை தரும் வண்ணம் அமைந்துள்ளது. அதாவது ஜோதிட சாஸ்திரத்தில் உள்ள அறிவியல் சார குப்பைகளை தூக்கி எறிந்து, ஜோதிட துரையின் அறிவியல் கூறுகளை மேம்படுத்திய பணியை தலைசிறந்தவர் சென்ற நூற்றாண்டில் வாழ்ந்த ஜோதிட மேதை, ஜோதிட மன்னன் பேராசிரியர் திரு.K.S.கிருஷ்ணமூர்த்தி என்றால் அது மிகையல்ல.
ஜோதிட துறையின் அடுத்த பரிணாம வளர்ச்சியை நீண்ட காலத்திற்கு பிறகு ஏற்படுத்தி, ஜோதிட துறை இனி எந்த வழியில் செல்ல வேண்டுமென்று சரியான திசையை காட்டியவர் திரு.K.S.K அவர்கள் என்பதும், இனி ஜோதிடத்தை அறிவியல் ரீதியில் ஆய்வு செய்ய நினைக்கும் எவரும் திரு.K.S.K. அவர்கள் காட்டிய திசையிலிருந்து தான் தனது ஆய்வுகளை தொடங்க முடியும் என்பது ஒரு மறுக்க முடியாத உண்மை.