நவக்கிரகங்களின் காரகங்கள்
சூரியன் :
சூரியன் வாயுப்பொருட்களால் ஆன ஒரு நெருப்புக் கோளம் ஆகும். இது நமது பூமியின் விட்டத்தைப் போல் சுமார் 10 மடங்கு அதிகம் ஆகும். சூரியனை மையமாக வைத்து அனைத்து கிரகங்களும் சுற்றி வருவதால் இதனை கிரகங்களின் தலைவன் என அழைக்கின்றோம். எனவே எல்லாவற்றிலும் முதன்மையானவர்களை சூரியன் குறிக்கும்.
ஒரு குடும்பத்திற்கு தந்தை தான் தலைவர். தந்தையைச் சார்ந்தே குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கர் இருப்பார்கள். எனவே குடும்ப உறவில் தந்தையையும், தந்தை வர்க்கத்தினரையும் சூரியன் குறிக்கும். அதே போல் நம்மை ஆளும் அனைத்து நபர்களையும் சூரியன் குறிக்கும். அதாவது நாட்டுத் தலைவர்கள், கட்சித்தலைவர்கள், பணிபுரியும் இடத்தில் மற்றவர்களுக்கு வேலையை பிரித்துத் தரும் மேலதிகாரிகள் போன்றவர்களை சூரியன் குறிக்கும்.
எனவே தலைமை தாங்குதல், மனோதிடம், நேர்மை, ஆளுமைதிறன், நிர்வாக திறன், ஒருவருடைய தனித்தன்மை, உத்யோகம், அந்தஸ்து, கம்பீரமான தோற்றம், சுய கௌரவம், தான் என்ற கர்வம், அரசியல், அரசாங்கம், அதிகாரம், குறிக்கோள் போன்றவற்றுக்கு சூரியன் காரகமாகும்.
கிரகங்களில் சூரியன் மட்டுமே சுய ஒளியை கொண்டுள்ளது. சூரியனில் இருந்துதான் மற்ற கிரகங்களுக்கு ஒளி செல்கின்றது. சூரிய ஒளியைத் தான் மற்ற கிரகங்கள் பிரதிபலிக்கின்றன. எனவே நம் உடலில் கண்களுக்கும், கண் பார்வைக்கும் காரகன் சூரியன் ஆகும். எனவே உடலில் முக்கிய உறுப்புகளுக்கு காரகன் சூரியன் ஆகும். அதாவது தலை, மூளை, இருதயம் போன்ற உறுப்புகளுக்கு காரகன் சூரியன் ஆகும். அடுத்து உடலில் உள்ள முக்கிய உறுப்பு உடலில் உள்ள எழும்புகள் ஆகும். எனவே எலும்புகளுக்கு காரகனும் சூரியன் ஆகும். உடலில் உள்ள உஷ்ணத்திர்க்கும் சூரியனே காரகன் ஆகும். உடலில் உள்ள உஷ்ணத்தின் மாற்றங்களினால் (ஏற்ற,இறக்கங்கள்) தான் நோய்கள் (காய்ச்சல்,ஜலதோஷம்) அதிகளவு வருகின்றன. எனவே நோய்களை குணப்படுத்தும் மருத்துவர்களையும், மருந்துப்பொருட்களும் சூரியனின் காரகங்கள் ஆகும்.
ஒரு ஜாதகத்தில் பலனை நிர்ணயிப்பதில் லக்னமே பிரதானமானது. சூரியனின் நிலையினை (சூரிய உதயம்) கருத்தில் கொண்டே லக்னம் கணிக்கப்படுகின்றது. லக்னபாவத்தையும் மற்ற 11 பாவங்களையும் நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது.
அதாவது ஒருவரின் விதியை நிர்ணயிப்பது சூரியனே ஆகும். அதன்படி ஒவ்வொரு பாவத்தின் கொடுப்பினையை (லக்ன புள்ளியை நிர்ணயிப்பத்தின் மூலமாக) சூரியன் நிர்ணயிப்பதினாலும் கிரகத்திற்கு வேலையை பிரித்துத் தர சூரியனே அதிகாரம் பெறுவதாலும் சூரியன் நவக்கிரகங்களில் கதாநாயக அந்தஸ்தை பெறுகின்றார்.
பகற்பொழுது, மாலை, பாறை, காடு, சிங்கம், கோதுமை, தாமிரம், செந்தாமரை, சுவைகளில் காரம், சிவப்பு, நிறம், மாணிக்கம், சிவபெருமான், கிழக்கு திசை போன்றவை சூரியனின் காரகங்களாகும். பெரும்பாலான ஜோதிட நூல்களில் சூரியனை அசுப கிரகமாகவே குறிப்பிடப்பட்டுள்ளது. பொதுவாக சூரியனின் காரகங்களை சற்று உற்று நோக்கினால் அதில் சுப தன்மைகளே அதிகம் என்பதால் சூரியனை 75% சுபமாகவே நாம் எடுத்துக்கொள்ளலாம்.
சந்திரன் :
சந்திரன் பூமியை மையமாகக் கொண்டு பூமியை சுற்றி வருகின்றது. சந்திரன் ஒரு ஜாதகத்தில் எந்த ராசியில் உள்ளதோ, அந்த ராசியை தான் ஜென்மராசி என்று கூறுகின்றோம். சந்திரன் எந்த நட்சத்திரத்தில் உள்ளதோ அதுதான் ஜென்மநட்சத்திரம் ஆகும். சந்திரனை வைத்துதான் தசா-புத்திகள் கணக்கீடு செய்கின்றோம்.
சூரியனுக்கு அடுத்த படியாக நட்சத்திர அந்தஸ்தினைப் பெரும் கிரகம் சந்திரன் ஆகும். சூரியன் உயிருக்கு காரகர் என்றால் சந்திரன் அந்த உயிரை வைத்திருக்கும் உடலுக்கு காரகர் ஆவார்.
கிரகங்களிலேயே ராசிமண்டலத்தை மிக வேகமாக சுற்றிவரும் கிரகம் சந்திரன் ஆகும். எனவே விரைவான செயல்களுக்கு சந்திரன் காரகன் ஆவார். சந்திரன் உடல் காரகன் என்பதால் எல்லா உணவு பொருட்களுக்கும் (சமைத்த உணவுகள், காய்கறிகள்) சந்திரனே காரகன் ஆவார்.
சிந்தனைகளுக்கு சந்திரனே காரகர் ஆவார். எனவே சந்திரனுக்கு மனோ காரகர் என்றும் பெயர். உறவு முறைகளில் சந்திரன், தாயையும், தாய் வர்க்கத்தையும், தாயை போன்று வயதில் மூத்த பெண்களான மாமியார், அத்தை,அண்ணி, மூத்த சகோதரி ஆகியோரையும் குறிக்கும் காரகர் ஆவார்.
சந்திரன் நீர் கிரகம் என்பதாலும் வெண்மை நிறத்திற்கு காரகர் என்பதாலும் உணவுப் பொருட்களில் பால், தயிர், அரிசியைக் குறிக்கும். மற்றும் சந்திரன் உடலில் உள்ள நீர் தன்மையான இரத்தத்திற்கும் காரகர் ஆவார்.
மேலும் அமைதியான தோற்றம், மனக்குழப்பங்கள், மன பேதலிப்பு, பைத்தியம், குளிர்ச்சி, சளி, சிலேத்தும சீதள நோய்கள், இரத்த அழுத்த நோய்கள், முத்து, அலுமினியம், ஈயம், நீர்வாழ் உயிரினங்கள், சுறுசுறுப்பு, வெண்பட்டு, வெண்குடை, இரவுப்பொழுது, உணவு விடுதுகள், தெய்வங்களில் பார்வதி அம்சம் போன்றவைகளுக்கு சந்திரனே காரகர் ஆகின்றார்.
செவ்வாய் :
ஜோதிடத்தில் பூமிக்காரகன் என்று செவ்வாயை நம் முன்னோர்கள் கூறி உள்ளார்கள். செவ்வாய், காலி நிலம், அசையா சொத்துக்கள் போன்றவற்றுக்கு காரகர் ஆவார். நிலம் மூலமான சண்டை – சச்சரவுகள், போர், போரில் பயன்படுத்தப்படும் கத்தி, வேல், அம்பு போன்ற கூர்மையான ஆயுதங்கள், துப்பாக்கி போன்றவைகளும், போரினால் ஏற்படும் காயங்கள், வலி, வேதனை, அடக்கு முறைகள், விபத்து போன்றவற்றுக்கும் செவ்வாயே காரகர் ஆவார்.
காவல்துறை, இராணுவம், தீயணைப்புத்துறை போன்ற சீருடை அணிந்த உடல் வலிமை, மனவலிமை உள்ளவர்கள் பணியாற்றும் துறைகளுக்கும், அதில் உள்ளவர்களுக்கும் செவ்வையே காரகர் ஆகின்றார்.
பெண்களுக்கு மட்டும் களத்திர காரகராகவும் செவ்வாய் உள்ளார். செவ்வாய், தைரியம், முன்கோபம், முரட்டுத்தனம், பிடிவாதம், மற்றவருக்கு கட்டுப்படாமை, புரட்சி செய்தல், உடல் வலிமையை பயன்படுத்துதல், மற்றவர்கள் படும் துன்பத்தை ரசித்தல், ரண வேதனையை உண்டாக்குதல் போன்றவற்றுக்கு செவ்வாய் காரகர் ஆவார்.
மன உளைச்சல், அமைதியின்மை, பதற்றம் போன்றவற்றுக்கும் செவ்வாயே காரகர் என்பதால் கடன், வழக்கு, சண்டை, சச்சரவுகள், துரோகம், மற்றவர்களால் மிரட்டப்படுதல் (Black Mail) , ஆயுதங்கள் வைத்திருத்தல், தீவிரவாதம், ஊழல் போன்றவற்றுக்கும் செவ்வாயே காரகர் ஆவார்.
இயந்திரங்கள், பெரிய தொழிற்சாலைகள், கருவிகள், கட்டுமான தொழில்கள், கனரக வாகனங்கள், ஆபத்தான கொடிய விலங்குகள், முட்செடிகள், புதர்கள், கரடு முரடான பாதைகள், செம்பு, பவளம், உணவு பொருட்களில் காரம் (மிளகாய் போன்றவை), தெய்வங்களில் முருகன் போன்றவற்றுக்கும் செவ்வாயே காரகர் ஆகின்றார்.
புதன் :
சுறுசுறுப்புக்கும், விரைந்து ஒரு செயலை முடிப்பதற்கும் புதனே காரகர் ஆவார். புத்தி கூர்மை உடையவர்கள் சமயோசித சிந்தனையுடன் செயல்பட்டு எந்த ஒரு செயலையும் விரைவாக முடிப்பார்கள். கிரகங்களில் சூரியனை மற்ற கிரகங்களை விட விரைவில் புதன் சுற்றி விடுவதால், புதன் புத்திகாரகர் என்று அழைக்கப்படுகின்றார்.
சமாதானத்திற்கும், நடுநிலைக்கும் காரகர் புதன் ஆவார். கவிதை, கணிதம், புள்ளி விபரம், காவியம், சிற்பம் போன்றவற்றுக்கு புதனே காரகராகிறார். விரைந்த செயல்களுக்கு புதன் காரகர் என்பதால், எழுத்து, தகவல் தொடர்பு, விளம்பரம், அஞ்சல், தந்தி, தொலைபேசி, தொலைக்காட்சி, பத்திரிக்கை, கம்ப்யூட்டர், நூல்கள், போக்குவரத்து போன்றவற்றுக்கு புதனே காரகராகின்றார்.
நரம்பு மண்டலங்களுக்கும், உணர்வு புலன்களுக்கும் புதனே காரகர் ஆவார். புதன் சமாதானம், திட்டமிடுதல், போன்றவற்றுக்கு காரகர். பொது அறிவு, தவணை முறை, நுட்பமான பொருட்கள், ஒப்பந்தம், நிபுணத்துவம், இளவரசன், பல குரலில் பேசும் திறன், விகடகவி, பச்சை நிறம், ஒரு முறைக்கு இரு முறை செய்யும் இரட்டைத் தன்மை, பிரதிநிதிகள் (Agent) நுட்பமான ஆராய்ச்சி, சிந்திக்கத் தூண்டும் நகைச்சுவைகள், எல்லாவற்றுக்கும் வளைந்து கொடுக்கும் தன்மை, இலக்கணப் புலமை, உலோகங்களில் பித்தளை போன்றவற்றுக்கு புதனே காரகராகின்றார்.
குரு :
சூரிய குடும்பத்தில் உள்ள கிரகங்களில் மிகப்பெரிய கிரகம் வியாழன் என்ற குரு என்பதால் குரு பெரிய மனிதத் தன்மைக்கு காரகர் ஆவார். உயர்ந்த குண நலன்களான சாந்தம், பண்பாடு, நீதி, நேர்மை, தர்ம சிந்தனை, ஒழுக்கம், கட்டுப்பாடு, பிறருக்கு நல்ல ஆலோசனையைத் தருவது, மற்றவரை மதித்தல், தெய்வ நம்பிக்கை போன்ற குணநலன்களைக் கொண்டிருக்க வேண்டும் என்பதால் மேற்கண்ட விஷயங்களுக்கு நவகிரகங்களில் குருவே காரகர் ஆவார்.
குரு என்றால் ஆசிரியர் அல்லது இறைவனைச் சுட்டி காட்டுபவர் என்று பொருள். எனவே ஆசிரியர்களுக்கும், ஆன்மீக வாதிகளுக்கும், மடாதிபதிகளுக்கும், தெய்வீக பணி செய்பவர்களுக்கும், ஞானிகளுக்கும் குருவே காரகராகின்றார். நவகிரகங்களில் குருவினுடைய காரகங்களில் அதிக அளவில் சுப காரகங்களே உள்ளன.
தெய்வீக சம்பந்தப்பட்ட எல்லா விஷயங்களுக்கும், குருவே காரகர். அடிப்படை ஜோதிடமான நாடி ஜோதிடத்தில் குருவை ஜீவ காரகன் என்று முனிவர்கள் கூறி இருக்கின்றார்கள். குருவே மஞ்சள் நிறத்திற்கும் காரகர் ஆகின்றார். ஆண், பெண் இருவருக்கும் குரு களத்திர காரகனாக இல்லாவிட்டாலும் கூட குரு பலம் என்பது (கோட்சாரத்தில்) திருமணம் போன்ற சுபநிகழ்ச்கிகளுக்கு அவசியமான ஒன்று.
உலோகங்களில் மஞ்சள் நிறத்தில் உள்ளதும், விலை உயர்ந்ததுமான (குரு தனகாரகன்) தங்கத்திற்கு குருவே காரகர் ஆகின்றார். குரு நேர்மைக்கு காரகர் என்பதால் சட்டம் – ஒழுங்கு, நீதிபதிகள், நீதிமன்றம், நேர்மையான சட்ட நடவடிக்கைகள் போன்றவற்றுக்கு குருவே காரகர் ஆவார். உடலை பெரியதாக்கும் கொழுப்பு சத்திற்கும் குருவே காரகர் ஆகின்றார்.
பூர்வீகம் ஆச்சாரம்(சுத்தம்), பாரம்பரியம், புரோகிதம், மத நம்பிக்கை, கோவில், சாஸ்திர ஞானம், மந்திர உச்சாடனங்கள், கல்வி நிறுவனங்கள், பருத்த உடல், கருவூலம் (வங்கிகள்), தெய்வங்களில் தட்சிணாமூர்த்தி, விலங்குகளில் மிகப்பெரிய உருவத்தை கொண்ட யானை, ஆலோசனைகளை கூறுபவர்கள் போன்றவை குருவின் காரகங்களாகும்.
சுக்கிரன் :
கிரகங்களில் குரு பேரின்ப காரகன் என்றால், அதற்கு நேர்மாறாக சிற்றின்ப விஷயங்களுக்கு சுக்கிரனே காரகர் ஆவார். அழகு, கவர்ச்சி, நளினம், மென்மை, காதல் போன்றவற்றுக்கு சுக்ரனே காரகர் ஆவார். இரு பாலினத்தில் ஆண்களை விட பெண்களிடத்தில் தான் அழகு, கவர்ச்சி, மென்மை போன்றவை அதிகம் (குறிப்பாக இளம் பெண்களிடத்தில்) என்பதால் சுக்ரன் பெண்களை குறிக்கும் காரகர் ஆகின்றார்.
ஒருவரிடம் உள்ள சொந்த பணத்திற்கும், பொன் பொருட்களுக்கும், கறுப்பு பணத்திற்கும் (பொதுப்பணம் என்றில்லாமல்) சுக்ரனே காரகர் ஆகின்றார். வெள்ளிக்கு சுக்ரனே காரகர் ஆவார். அருசுவைகளில் நம்மை மயக்கும் இனிப்பு சுவைக்கு காரகரும் சுக்ரனே ஆவார்.
சுக்ரன் பாலின இன்பங்களுக்கு காரகர் என்பதால் ஆண், பெண் உறவுகளின் பொது வெளிப்படும் விந்து, சுரோணிதம் இவற்றுக்கு சுக்ரனே காரகர் ஆவார். ஆண், பெண் பாலின வேறுபாடுகளை (இனக்கவர்ச்சி) ஒருவருடைய உடலில் உள்ள ஹர்மோன்கள் நிர்ணயிக்கும்.எனவே ஹார்மோன்களுக்கும் சுக்ரனே காரகர் ஆகின்றார்.
மேலும் மகிழ்ச்சியான இல்லற வாழ்க்கை, கள்ளத் தொடர்புகள், ஆடம்பர பொருட்கள், இன்பங்களை நுகருதல், மற்றவர்களை மயக்கும் கலைஞர்கள், விபச்சாரிகள், ஒப்பனை, ஆடை அலங்காரங்கள், சொகுசு மாளிகைகள், இயல், இசை, நாடகங்கள், நடனங்கள், உறவு முறையில் மனைவி, உயர் ரக மதுபான வகைகள், வைரம், தெய்வங்களில் மஹாலட்சுமி போன்றவை சுக்ரனின் காரகங்களாகும்.
சனி :
நவகிரகங்களிலேயே தொலைவில் உள்ள கிரகம் சனி கிரகம் ஆகும். கால தாமதத்திற்கு காரணமான சனிக்கு மந்த காரகர் என்று பெயர். மந்தமாக செயல்படும் சோம்பேறிகளுக்கும், உடல் ஊனமுற்றவர்களுக்கும், வயதான நபர்களுக்கும், கிழத்தோற்றம் உடைய நபர்களுக்கும் சனியே காரகர் ஆகின்றார்.
உடலை விட்டு உயிர் பிரியும் காலத்தையும் சனி தாமதப்படுத்தும் என்பதால் சனிக்கு ஆயுள் காரகர் என்று பெயர். சனி இருட்டு நிறமாகவே இருக்கும். இருட்டு என்பது கரிய நிறம் என்பதால் கரிய நிறத்திற்கு காரகர் சனியே ஆவார்.
அடித்தட்டு மக்கள், மற்றவருக்கு கீழ்படிந்து நடப்பவர்களாகவும், தாழ்வு மனப்பான்மை கொண்டவர்களாகவும், அழுக்கு நிறைந்த பகுதிகளில் வசிப்பவர்களாகவும் (கருப்பு நிறமும் அழுக்கினைக் குறிக்கும்), மற்றவர்கள் பயன்படுத்திய பொருட்களைப் பயன்படுத்துபவர்களாகவும், ஆளும் வர்க்கத்தினரை எளிதில் காண முடியாதவர்களாகவும், கடினமாக உழைப்பவர்களாகவும் (சூரியன் அரசனை அல்லது ஆளுபவர்களை குறிக்கும்)
வேலைகாரர்களின் முழு ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே தொழிலை சிறப்பாக நடத்த முடியும் என்பதால் சனிக்கு தொழில் காரகன் என்றும் பெயர். சனி துக்கங்களுக்கும், வலி, வேதனைகளுக்கும், இறப்பிற்கும் காரகராகின்றார். உலோகங்களில் கருப்பு நிறம் கொண்டதும், தொழில்களுக்கு அதிகம் பயன்படுவதுமான இரும்பும் சனியின் காரகமே ஆகும்.
ஆண், பெண் மலட்டுத்தன்மைக்கும் சனியே காரகர் ஆகும். மேலும் இரவு வேலை, பொய், கஞ்சத்தனம், சில்லறை, வறுமை, ஊனம், ஏமாறுதல், ஏக்கம், அமைதியான வீட்டு விலங்குகள், தாழ்ந்த ஜாதி, பக்கவாதம், விடாமுயற்சி, விவேகம், இழப்பு, தத்துவம், தன்நிலை தாழ்தல், நீலக்கல், தெய்வங்களில் ஐய்யனார் போன்ற நீச்ச தெய்வங்கள் போன்றவைகளுக்கும் சனியே காரகர் ஆவார்.
ராகு :
ராகு என்பது ஒரு நிழல் கிரகம். ராகு நிழல் கிரகம் என்பதால், கண்ணுக்குப் புலனாகாத ஆவிகள், பேய், பிசாசுகள், மாந்திரீகம், செய்வினை போன்றவை ராகுவின் காரகங்களாகும். மேலும் எதையும் பெரிதுபடுத்துவதை ராகுவின் காரகமாக நம் முன்னோர்கள் கூறுகின்றார்கள். எனவே பிரம்மாண்டம் அல்லது விகாரம் என்பது ராகுவின் காரகங்களாகும். பேய், பிசாசுகள் போன்றவைகள் விகாரமானவைகளாக சித்தரிக்கப்படுகின்றன.
ராகு, கேதுவை பாம்பின் அம்சமாக மரபு ஜோதிடத்தில் கூறப்படுகின்றது. அதாவது விஷ ஜந்துக்களுக்கு காரகர் ராகு ஆகும். ராகுவும் மலட்டுத்தன்மைக்கு காரகராகின்றார்.
ராகு பிரம்மாண்டம் என்பதால் இந்த பிரபஞ்சம் முழுவதையும் குறிக்கும் கிரக காரகர் ஆவார். எனவே வெளிநாட்டையும், அந்நிய மதங்களையும், அந்நிய மொழிகளையும் ராகுவே குறிப்பார். ராகு நிழல் கிரகம் என்பதால் போட்டோ, சினிமா, மின்சாரம் போன்றவற்றிற்கும் ராகுவே காரகர் ஆவார்.
சிறைச்சாலை, உடலில் உள்ள சுவாசம், அலர்ஜியால் உடலில் ஏற்படும் தடிப்புகள் (விகாரம்), அகன்ற பாத்திரங்கள், வெளிநாட்டுத் தொடர்பு, ஏற்றுமதி, இறக்குமதி, எதையும் மிகைப்படுத்தி சித்தரித்தல், மோசடி வித்தைகள், வழக்கத்திற்கு மாறான செய்கைகள், புற்றுநோய் மூதாதையர்கள், தாத்தா, பாட்டி, தெய்வங்களில் துர்க்கை, ரத்தினங்களில் கோமேதகம் போன்றவை ராகுவின் காரகங்களாகும்.
கேது :
ராகுவைப் போல் கேதுவும் ஒரு நிழல் கிரகம் ஆகும். கேது எதையும் சிறியதாக்குவது, சிதைப்பது மற்றும் துண்டிப்பது போன்ற காரகங்களை கொண்டுள்ளது. பாம்பின் வாலைப்போல் சிறுமைப்படுத்துவது கேதுவின் காரகம் ஆகும். கேதுவை ஞானகாரகன் என்று நம் முன்னோர்கள் கூறுகின்றார்கள்.
ராகுவைப் போன்று கேதுவும் விஷங்களையும், போதை பொருட்களையும் குறிக்கும் காரகர் ஆவார். குறிப்பாக போதை பொருட்களில் அபின், கஞ்சா போன்றவை கேதுவின் காரகங்களாகும்.
உடைப்பது, சிதைப்பது, துண்டிப்பது, அரிப்பது என்பது கேதுவின் காரகம் என்பதால் நாட்டை சீர்குலைப்பவர்களுக்கும், கலக காரர்களுக்கும், மிரட்டல் விடுபவர்களுக்கும், வெடிகுண்டு, பட்டாசு, ஜல்லி, அமிலம் எல்லாவித சட்டத்திற்கு புறம்பான செயல்களுக்கும், எல்லாவித தடைகளுக்கும் கேதுவே காரகர் ஆவார்.
ஏழ்மை, மத நம்பிக்கை, தத்துவ ஞானம், மோட்சம், வேதாந்தம், மனோபலம், தனிமையில் இருத்தல், தவம், புண்கள், ரணங்கள், உடலில் உள்ள அமிலம், மருத்துவம், மௌன விரதம், பில்லி சூனியம், மாந்திரீகம், ஆவியுலக தொடர்புகள், பிரிவினை வாதம், விவாகரத்து, எளிதில் கண்டுபிடிக்க முடியாத போலிகள், நெருக்கடிகள், தெய்வங்களில் விநாயகர், நவரத்தினங்களில் வைடூரியம் போன்றவை கேதுவின் காரகமாகும்.